கோலாலம்பூர் – மலேசிய நாட்டின் மூத்த எழுத்தாளர், முனைவர் ரெ. கார்த்திகேசுவின் (ரெ.கா) மறைவு மலேசிய இலக்கிய உலகிலும், உலகளாவிய நிலையில், தமிழ் ஆர்வலர்கள், படைப்பாளர்களிடத்திலும் மிகுந்த துயரத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முத்து நெடுமாறன்
ரெ.காவுடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகியவரான கணினி வல்லுநர் முத்து நெடுமாறன் “நான் உருவாக்கிய ‘முரசு அஞ்சலின்’ முதல் பயனர். முதல் பயனர் மட்டுமல்ல, முதன்மைப் பயனரும் கூட. அவரோடு சேர்ந்து செய்த ஒவ்வொரு திட்டமும் வெற்றி பெற்றது! மிகவும் நெருங்கிய நண்பர். நான் மதித்துப் போற்றும் உயர்ந்த பண்பாளர். ‘மலேசியர்’ என்று கூறிக்கொள்வதில் மகிழ்பவர், பெருமைப்படுபவர். அவரின் மறைவு மலேசியத் தமிழுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. தனிப்பட்ட முறையில், ஓர் ஆழ்ந்த நட்பின் இழப்பு என்னை வாட்டுகிறது!” என தனது இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழகப் பத்திரிக்கையாளர் மாலன்
தமிழகத்தின் பிரபல பத்திரிக்கையாளரும், புதிய தலைமுறை பத்திரிக்கை ஆசிரியரும், அண்மையில் மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருந்தவருமான மாலன், ரெ.கா.வின் மறைவு குறித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“என் அருமை நண்பரும், மலேசியாவின் ஆகச் சிறந்த எழுத்தாளருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அமரத்துவம் எய்திவிட்டார். தமிழுக்கு நல்ல சிறுகதைகளைத் தந்தவர். அவரது கதைகளில் சிலவற்றை திசைகள் மின்னூலாக வெளியிட்டுள்ளது. அவரது சிறப்பு அவர் மிகச் சிறந்த பண்பாளர். தமிழை நவீனப்படுத்துவதிலும் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் துணை நின்ற தோழர்” என மாலன் ரெ.காவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
“அண்மையில் மலேசியா சென்றிருந்த போது அவர் உடல் நலம் குன்றியிருப்பது அறிந்து அவரது இல்லம் தேடிச் சென்று பார்த்தேன். மிக மெலிந்து வாடியிருந்தார். ஆனால் மன உறுதி குலையவில்லை. மீண்டுவிடுவார் என்று நம்பியிருந்தேன்” என்றும் மாலன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“வாழும் காலத்திலேயே அவரது பெயரில் சிறுகதைகளுக்கான விருது ஒன்றினை நிறுவி மலேசிய எழுத்தாளர் சங்கம் சிறப்பித்தது. அந்த விருதுக்குரிய கதையை முதன் முதலில் தேர்ந்தெடுக்கும் கெளரவத்தை எனக்கு அளித்தது. அந்த நிகழ்வில் அவரைக் குறித்து நான் பேசியது மீண்டும் மீண்டும் நினைவில் ஒலிக்கிறது” என்றும் மாலன் ரெ.கா.குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
டாக்டர் என்.கண்ணன்
ஜெர்மனி, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிவிட்டு, தற்போது மலேசியாவில் பணியாற்றி வரும் டாக்டர் என்.கண்ணன், ரெ.கா.வின் மறைவு குறித்து தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
“மலேசியாவின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவரும் என் இனிய நண்பருமான ரெ.கார்த்திகேசு அவர்கள் இப்பூ உலகை நீத்தார் என்ற செய்தி வந்துள்ளது. மிகவும் வருத்தமாக உள்ளது. மின்னுலக நண்பராகி பின் மலேசியா ரெ.கா என்றாகிப் போன அவரின் இழப்பு என் வாழ்வில் ஆழமான சோகத்தை உருவாக்கியுள்ளது. அவர் ஆத்மா சாந்தியடைய போன்ற சொல்லாடல் அவர் விரும்பாதது. வந்தார், இருந்தார், கற்றார், சொன்னார், செய்தார், சென்றார் என்பதே அவருக்கு ஏற்புடையதாய் இருக்கும்” என டாக்டர் கண்ணன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பல மலேசியத் தலைவர்களும் இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும், ரெ.கா.வின் மறைவு குறித்து தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.