Home நாடு கவிஞர் வைரமுத்து – மரபின் மைந்தன் முத்தையா – முத்து நெடுமாறன் – மூவரையும் இணைத்த...

கவிஞர் வைரமுத்து – மரபின் மைந்தன் முத்தையா – முத்து நெடுமாறன் – மூவரையும் இணைத்த பாடல்!

203
0
SHARE
Ad
(இடமிருந்து) ராமேஸ்வரி ராஜா, தேவிலெட்சுமியின் புதல்வி, தேவிலெட்சுமி, முத்து நெடுமாறன், மரபின்மைந்தன் முத்தையா, டத்தோ கோபி, இரா.முத்தரசன், அண்ணாதுரை

(கவிஞர் வைரமுத்து, மரபின் மைந்தன் முத்தையா, முத்து நெடுமாறன் என்ற மூன்று ஆளுமைகளையும் ஒரே முனையில் – ‘மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே’ – என்ற திரைப்பாடல் எவ்வாறு இணைத்தது என்ற சுவையான சம்பவங்களை விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

‘மொட்டுகளே! மொட்டுகளே! மூச்சுவிடா மொட்டுகளே! கண்மணியாள் தூங்குகிறாள்’ என்ற கவிஞர் வைரமுத்துவின் பாடலைக் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். அந்தப் பாடல் இருவேறு நாடுகளில் உள்ள மூன்று ஆளுமைகளை எவ்வாறு இணைத்தது என்பது ஒரு சுவாரசியம்.

கடந்த ஜூன் 23-ஆம் நாள் (2024) நடைபெற்ற கண்ணதாசன் விழாவுக்காக டத்தோஸ்ரீ எம்.சரவணன் அழைப்பின் பிரபல எழுத்தாளரும் கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா மலேசியா வந்திருந்தார்.  அந்த சமயத்தில் மக்கள் ஓசையின் இயக்குநர் டத்தோ எஸ்.கோபாலகிருஷ்ணன் (கோபி) அவரை மதிய உணவு விருந்துபசரிப்புக்கு அழைத்திருந்தார். முத்தையாவுடன் கோபிக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அந்த மதிய விருந்திற்கு என்னையும் அழைத்திருந்தார் கோபி.

அதே தினத்தில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனுடன் எனக்கு மதிய உணவு சந்திப்பு இருந்தது. முத்தையாவுடனான மதிய உணவு சந்திப்பில் முத்து நெடுமாறனையும் அழைக்கவா என நான் கேட்டதற்கு கோபியும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். முத்து நெடுமாறனும் வருவதற்கு ஒப்புக் கொண்டார். முத்தையாவுடன் நெருங்கிய நட்புறவு கொண்ட  ஓசையின் ஊடகவியலாளர் ராமேஸ்வரி ராஜாவும், கண்ணதாசன் விழாவில் சிறப்பான, கலகலப்பான உரை நிகழ்த்திய முனைவர் தேவிலட்சுமியும் அவரின் மகளும் அந்த மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர். கோபியின் அழைப்பை ஏற்று தன்முனைப்பு உரையாளரும், விளையாட்டுத் துறை நிபுணத்துவம் கொண்டவருமான முனைவர் அண்ணாதுரையும் இணைந்து கொண்டார்.

முத்து நெடுமாறன்-முத்தையா
#TamilSchoolmychoice

மதிய உணவு சந்திப்பின்போது உரையாடல்கள் பெரும்பாலும் முத்தையாவுக்கும் முத்து நெடுமாறனுக்கும் இடையில்தான் நிகழ்ந்தன. தமிழ் எழுத்துருக்கள், கணினியில் தமிழ், இணையத்தில் தமிழ், செயற்கை நுண்ணறிவு என பல தொழில் நுட்ப அம்சங்கள் குறித்து முத்தையாவும் தேவிலெட்சுமியும் கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் ஆர்வத்துடன் தொடுக்க, முத்து நெடுமாறனும் பல தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

‘நமது நம்பிக்கை’ இதழில் மரபின் மைந்தன் முத்தையாவின் கட்டுரை…

தமிழ் நாடு திரும்பியதும் தனது ‘நமது நம்பிக்கை’ என்ற ஜூலை மாத இதழில் முத்து நெடுமாறனுடனான சந்திப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார் முத்தையா. சில நாட்களுக்குள்ளாக அந்த சந்திப்பு குறித்து அவர் கட்டுரையாக எழுதி அச்சில் வெளியிட்டது அவரின் எழுத்து (உத்)வேகத்திற்கான இன்னொரு உதாரணம். அந்த இதழ் கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மலராக வெளிவந்திருந்தது.

நமது நம்பிக்கை இதழில் முத்தையாவின் கட்டுரை

தனது கட்டுரையில் முத்து நெடுமாறன் விவரித்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தார் முத்தையா. அந்தக் கட்டுரையின் முக்கிய அம்சம் இதுதான்:

சீனாவில் நடந்த செர்ரி பிளாசம் பெஸ்டிவல் என்னும் நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் கலந்து கொண்டபோது, மலர்கள் பற்றிய சீனக் கவிதைகளை சீனர்கள் பலரும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டு அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் இதுபோன்ற கவிதைகள் தமிழிலும் இருக்கிறதா என முத்து நெடுமாறனிடம் கேட்டிருக்கிறார்.

‘சங்க இலக்கியங்களில் இல்லாத மலர்களைப் பற்றிய பாடல்களா’ என நினைத்துக் கொண்ட முத்து நெடுமாறன் நவீனப் பாடல் ஒன்றை அறிமுகம் செய்ய எண்ணி கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே! காலையில் மலருங்கள்’ என்ற பாடலைத் தேர்வு செய்தார்.  (ரோஜாக்கூட்டம் படத்தில் பரத்வாஜ் இசையில், ஹரிஹரன், சாதனா சர்கம் பாடியது) அந்தப் பாடல் வரிகள் முழுவதையும் ஆங்கிலத்தில் முத்து நெடுமாறன் விளக்கிக் கூற, அதனை உடனுக்குடன் சீன மொழியில் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்து கூட்டத்தினருக்கு விளக்க, ஆரவாரத்துடனும் கரவொலிகளுடனும் அந்தப் பாடல் வரிகளின் பொருளின் ஆழத்தை சீனர்கள் கொண்டாடினர்களாம்.

முத்து நெடுமாறனுடனான சந்திப்பையும், மேற்கண்ட சம்பவத்தையும் இணைத்து கட்டுரை ஒன்றை எழுதி தனது ‘நமது நம்பிக்கை’ இதழில் முத்தையா அடுத்த சில நாட்களிலேயே வெளியிட்டார். முத்தையாவின் ஊடகத் துறை வேகத்தையும் எழுத்து வன்மையையும் காட்டுவதாக அமைந்திருந்தது அந்தக் கட்டுரை.

அடுத்து நிகழ்ந்தது இன்னொரு சுவாரசியம்!

வைரமுத்துவின் செய்தி

கவிஞர் வைரமுத்துவின் மின்னஞ்சல் செய்தி

கட்டுரையைப் படித்த வைரமுத்து முத்து நெடுமாறனின் மின்னஞ்சல் முகவரியைப் பெற்று செய்தி ஒன்றை அனுப்பினார். அந்த செய்தி :

அன்புடையீர், வணக்கம்.

நமது நம்பிக்கையில் உங்கள் கட்டுரை பார்த்தேன். இலக்கியத்தின் ஆழம் கண்டு எழுதியிருக்கிறீர்கள். உங்களது நேரிய பார்வைக்கும் கூரிய சொற்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத் தமிழுக்கு இணைந்து பணிபுரிவோம். நன்றி.

அன்புள்ள,

வைரமுத்து

இவ்வாறாக, வைரமுத்து எழுதிய ஒரு தமிழ்ப்பாடல் முத்து நெடுமாறன் மூலம் சீனாவில் உள்ள சீனர்களுக்கு சென்றடைந்து, அந்த சம்பவத்தை முத்து நெடுமாறன் விவரித்த காரணத்தால் முத்தையாவின் கைவண்ணத்தில் ஒரு கட்டுரையாக வடிவமெடுத்து ‘நமது நம்பிக்கை’ இதழிலும் ஒரு கட்டுரையாக இடம் பெற்றது. வைரமுத்துவின் பார்வைக்கும் சென்று அவரின் வாழ்த்துதலையும் பெற்றது.

(28 ஜூலை 2024-ஆம் தேதி மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் வெளியான கட்டுரை)