Home Featured நாடு நினைவஞ்சலி: மின்னுட்ப உருவாக்கங்களை முழுமையாகப் பயன்படுத்தியவர் ரெ.கா.

நினைவஞ்சலி: மின்னுட்ப உருவாக்கங்களை முழுமையாகப் பயன்படுத்தியவர் ரெ.கா.

1434
0
SHARE
Ad
karthigesu-reka-sellinam-photo
(நேற்று திங்கட்கிழமை 10 அக்டோபர் 2016-ஆம் நாள்,  மூத்த தமிழ் எழுத்தாளரும் கல்வியாளருமான ரெ. கார்த்திகேசு, நம்மை விட்டுப் பிரிந்தார். கணினி நிபுணர் முத்து நெடுமாறன் வடிவமைப்பில் உருவான செல்லினம் குறுஞ்செயலிக்கு அடிப்படையாக அமைந்த முரசு அஞ்சல் செயலியின் முதல் தனிநபர் பயனர் இவர். கடந்த  மார்ச்சுத் திங்களில் இவரைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சிக்காக ஒர் மலர் வெளியிடப்பட்டது. அந்த மலருக்காக, முத்து நெடுமாறன் எழுதிய கட்டுரையை  நினைவஞ்சலியாக இங்கே வழங்குகிறோம்) 

1986ஆம் ஆண்டு கோலாலம்பூரில் ஆறாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் முதன்முதலில் கணினியில் தமிழ் குறித்த கட்டுரை ஒன்றனைப் படைத்தேன். கணினியில் உள்ள சொல் செயலாக்கச் செயலிகளைக் கொண்டுத் (word processors) தமிழில் தட்டெழுதுதல், திருத்தம் செய்தல், நீக்குதல், தேடுதல், மாற்றுதல் போன்ற கூறுகளை, செயல்முறைக் காட்சிகள் வழி விளக்கிக் கொண்டிருந்தேன். அரங்கில் அமர்ந்திருந்த பெரும்பாலோர் வியந்தனர். கைத்தட்டி உற்சாகமூட்டினர். ஆனால் இந்தத் தமிழ் சொல் செயலாக்கச் செயலின் வலிமையை ஒருசிலர் தான் உணர்ந்தனர் என்பது அவர்கள் எழுப்பிய கேள்விகளில் இருந்து தெரிந்து கொண்டேன். அந்த ஒருசிலரில், தாம் இதனை உடனே பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு விசாரித்தவர் ரெ. கார்த்திகேசு. அன்றுதான் அவர் எனக்கு முதன் முதலில் அறிமுகமானார்.

karthigesu-re-function‘முரசு’ என்னும் பெயரில் நான் வெளியிட்ட தமிழ் மென்பொருளை, அதனில் அடங்கியுள்ள வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களுக்காகவே அனைவரும் பயன்படுத்த விரும்பினர். குறைந்த விலையில் பெறக்கூடிய தமிழ் அச்சுக் கோக்கும் இயந்திரமாகவும், அதிக வசதியுள்ளத் தட்டச்சுப் பொறியாகவுமே இந்த உருவாக்கத்தை அப்போது பார்த்தனர். நான் இந்த ஆய்வில் இறங்கிய நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது என்பதனை உணரவைத்தவர் ரெ கா. தமது படைப்புகளை நேரடியாகவே கணினியில் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு முரசு தமிழ் மென்பொருளைப் பெற்றுக் கொண்டவர். அவரே என் முதல் தனிநபர் பயனர்!

மின்னுட்ப மேம்பாட்டாளர்கள் தங்கள் பயனர்களிடம் இருந்து பெரிதும் எதிர்பார்ப்பது அவரவரின் விருப்பப் பட்டியல் (wish list). இதில் இரண்டு முக்கியத் தெளிவுகள் கிடைக்கும்: ஒன்று இந்த மின்னுருவாக்கங்கள் எத்தகையப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டனவோ, சரியாக அத்தகையப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது. மற்றொன்று, எந்தெந்தப் புதிய கூறுகளை அல்லது வசதிகளைச் சேர்த்தால் பயன்பாடு மேலும் சிறக்கும் என்பது. தொடக்கத்தில் இருந்தே இதுபோன்ற விருப்பப் பட்டியல்களை ரெ. கா.விடம் இருந்து அதிகம் பெற்றிருக்கிறேன்.

#TamilSchoolmychoice

எண்பதுகளின் இறுதியில் தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் முரசு அஞ்சலின் புதிய பதிப்பை வெளியிடுவதற்குத் துன் சம்பந்தனார் மாளிகையில் உள்ள சோமா அரங்கில் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றனை நடத்துவோம். ஏறக்குறைய 10 ஆண்டுகள் தொடர்ந்து இந்த வெளியீட்டு விழாக்கள் நடைபெற்றன. நாடெங்கிலும் இருந்து பயனர்கள் வருவார்கள். தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டு ஒன்றனில் நடந்த விழாவில், ரெ.கா. சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். அவரின் ‘வானத்து வேலிகள்’ என்னும் முதல் நாவலின் மூலப் படியை ஒரு கோப்பில் கொண்டு வந்திருந்தார். அந்தக் கோப்பை அனைவருக்கும் தூக்கிக் காட்டிவிட்டு அவரின் ‘தேடியிருக்கும் தருணங்கள்’ எனும் இரண்டாவது நாவலின் மூலப்படி என்று, சட்டைப்பையில் இருந்த ஒரு பதிவுத் தட்டை (floppy diskette) எடுத்துக் காண்பித்தார். கைத்தட்டல் ஒலி அரங்கை நிரப்பியது. நோக்கம் நிறைவேறியது என்று என் மனம் நிறைந்தது.

மின்னஞ்சல் குழுக்கள்

karthigesu-re-decdமின்னுட்ப உருவாக்கங்களில் தமிழை முழுமையாகப் பயன்படுத்தும் ரெ.காவின் முயற்சி கணினியோடு நின்றுவிடவில்லை. 1993ஆம் ஆண்டு இறுதியில் நாங்கள் அறிமுகப் படுத்திய தமிழ் மின்னஞ்சல் மடலாடற்குழுவில் (email mailing lists), ரெ.காவும் இணைந்தார். தமிழைப்பற்றிய மடலாடற்குழுக்கள் பல இதற்குமுன் தோன்றியிருக்கின்றன. அவை அனைத்திலும் ஆங்கிலத்திலேயே மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்தன. ‘தமிழ் இணையம்’ என்னும் பெயரில் நாங்கள் தொடங்கிவைத்த இந்தக் குழுவே, முதன் முதலில் தமிழில் மின்னஞ்சல்கள் வழி கலந்துரையாடும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்தக் குழுவில்தான் ‘இண்டெர்நெட்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ’இணையம்’ என்னும் சொல்லைத் தமிழில் அறிமுகப் படுத்தினார் ‘நயனம்’ இதழின் ஆசிரியர் திரு ஆதி. இராஜகுமாரன்.

மொழி, இலக்கியம், இலக்கணம், சமூகம், தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில் சுவையான தகவல் பரிமாற்றங்கள் நடந்தன. இந்தக் குழுமத்தில், அதிகமாகத் தமிழில் எழுதும் உறுப்பினர்களுள் முக்கியமான ஒருவராக ரெ.கா. விளங்கினார்.

மின்னுட்ப உலகில் ஏற்படும் ஒவ்வொரு சுழற்சியிலும் ரெ.காவின் ஈடுபாடு தொடர்ந்து இருந்து வந்தது. இணையத் தளங்கள், மின்-இதழ்கள், வலைப்பூக்கள் (blogs) என்று தொடங்கி, தற்போது நட்பூடகங்களிலும் (social media) அவரின் படைப்புகள் இடம் பெற்று வருகின்றன.

மின்னுட்ப உலகில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் புத்தாக்கங்கள் ஒவ்வொன்றிலும் தமிழ்ப் படைப்புகள் இடம்பிடிக்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவர் ரெ.கா. மின்கருவிகளைக் கொண்டு எழுதுவது தங்களின் படைப்புகளுக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறிவரும் இவர்காலத்து எழுத்தாளர்களுள் ரெ.கா. தனிநிலையினர். அவர் படைப்புகள் அனைத்தையுமே மின் வடிவில் வைத்திருக்கிறார். புதிய படைப்புகளைக் கணினியிலும், இணையத்திலும், வலைப்பூக்களிலும் நேரடியாகவே எழுதுகிறார். புதுப் புதுக் கருவிகளில் அவற்றை வெளியிட மிகுந்த ஆர்வமும் கொண்டுள்ளார்.

மின்நூல்கள்

இவரின் ‘நீர்மேல் எழுத்து’ என்னும் சிறுகதைத் தொகுப்பும் ‘விமர்சன முகம்’ என்னும் கட்டுரைத் தொகுப்பும் முறையான மின்னூல்களாக்கப்பட்டு, ‘கோபோ’ என்னும் பெயர்கொண்ட மின் புத்தகக் கடையில் வெளியிடப்பட்டன. தமிழ் மின்னூல்களின் புழக்கம் பெருகவேண்டும் எனும் உன்னத எண்ணத்தில், இவற்றின் விலையை வெறுமனே 1.99 அமெரிக்க வெள்ளியாக இருக்கட்டும் என்று ரெ.கா. முடிவு செய்தார். அப்படி இருந்தும் இந்த நூல்களின் பதிவிறக்கங்கள் ஐந்தை விடத் தாண்டவில்லை! புதிய தொடக்கங்கள் எல்லாமே உயர்ந்த நிலையை உடனே அடைவதில்லை. ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும். ரெ.காவைப் போலப் பலரும் தங்கள் படைப்புகளை மின்னூல்களாகவும் வெளியிட முன்வந்தால் தான் தமிழ் மின்னூல்களின் பயன்பாடும் புதிய நூல்களின் வரவும் அதிகரிக்கும். அந்தக் காலம் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போம்!

– முத்து நெடுமாறன்,

மார்ச்சு 2016.

பின்குறிப்பு: ரெ.கா.வின் படைப்புகளை மின்நூல்களாகவும், பி.டி.எப் கோப்புகளாகவும் ‘மலேசியாவிலிருந்து ரெ.கா.‘ என்னும் அவரின் வலைப்பதிவில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.