Home Featured இந்தியா வாக்களிப்புக்கு பிந்திய கருத்தாய்வு: பாஜக உ.பி.யில் வெற்றி பெறும்!

வாக்களிப்புக்கு பிந்திய கருத்தாய்வு: பாஜக உ.பி.யில் வெற்றி பெறும்!

1075
0
SHARE
Ad

rahul-modi-comboபுதுடில்லி – கடந்த ஒரு மாதமாக பல கட்டங்களாக நடந்து வந்த 5 வட இந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் நாளை சனிக்கிழமை வெளியாகவிருப்பதால், இந்தியா முழுமையிலும் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், பல அரசியல் கணக்குகளை இந்தியா முழுமைக்கும் எடுத்துக் காட்டும்.

நேற்று வியாழக்கிழமை முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்தாய்வுகளின் படி பாஜக, பிரதமர் நரேந்திர மோடியின் அபார பிரச்சாரங்களால் முன்னணி வகிக்கின்றது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றும் மற்ற நான்கு மாநிலங்களில் பாஜகவே வெற்றி வாகை சூடும் என்றும் கருத்தாய்வுகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

உத்தரப் பிரதேசம் முடிவுகள் எப்படியிருக்கும்?

uttar pradesh-elections combo5 மாநிலங்களில் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது உத்தரப் பிரதேசத்தின் முடிவுகள்தான். இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலம். மக்கள் தொகையில் மட்டுமல்ல – 403 சட்டமன்றத் தொகுதிகளையும் – 80 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்டிருப்பதால், அரசியல் ரீதியாகவும் பெரிய மாநிலம்.

கடந்த 2014 பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க காரணமாக இருந்ததும் இதே உத்தரப் பிரதேச மாநிலம்தான்! மொத்தமுள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 71 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமஜ்வாடி கட்சி 5 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதன் காரணமாக, சட்டமன்றத் தேர்தலில் அகிலேஷ்-ராகுல் கைகோர்த்து அமைத்திருக்கும் கூட்டணி வெற்றி பெறுமா அல்லது பாஜக இந்த முறை மாநிலத்தைக் கைப்பற்றுமா என்ற பரபரப்பு நிலவுகின்றது.

எல்லா மாநிலங்களிலும் ஒரு தலைவரை மாநில முதல்வராக முன்னிறுத்தி போட்டியில் இறங்கும் பாஜக இந்த முறை வித்தியாச வியூகமாக யாரையுமே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் பாஜக ஆட்சி – மோடி அலை என்ற கோணங்களில் மட்டும் பிரச்சாரத்தை நடத்தி வந்தது.

உத்தரப் பிரதேசத்தை வெற்றி கொண்டால்தான் பாஜக முதல்வரை அறிவிக்கும் என்றும் அந்தக் கட்சிப் பிரச்சாரங்களில் கூறப்பட்டன.

பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகளின் கருத்தாய்வுகள், உ.பி.யில் பாஜகவே வெற்றி பெறும் என்றும், அதற்குக் காரணம் மோடியின் அலைதான் என்றும்  தெரிவிக்கின்றன.

உ.பி.யில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாமல் தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்பும் இருப்பதாகவும் சில கருத்தாய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி குறைந்த இடங்களையே பெற்றாலும், அதன் ஆதரவைப் பெறும் கட்சியால்தான் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலைமை உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

மற்ற மாநிலங்களின் நிலை!

பஞ்சாப் மாநிலத்தில் பாஜக ஆதரவிலான அகாலி தளக் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக, காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், அந்த மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடும் போட்டியை வழங்கியிருக்கின்றது என்றும் கருத்தாய்வுகள் தெரிவிக்கின்றன.

கோவா, உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியே அமையும் என்றும் கருத்தாய்வுகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

மணிப்பூரில் பாஜக வெற்றி பெறலாம் அல்லது பின்னடைவைக் காணலாம் என இருவேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன.

-செல்லியல் தொகுப்பு