கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை பேஸ்புக்கில் காணொளி ஒன்று பலராலும் பகிரப்பட்டது. அக்காணொளியில், வயதான பெண் ஒருவர் தனது பேத்தியை மிகவும் முரட்டுத்தனமாக அடித்துத் துன்புறுத்துவது போலான காட்சிகள் பதிவாகியிருந்தன.
குழந்தைகளின் நலனுக்காக மூத்தோர் கண்டிப்பதும், சில நேரங்களில் அதிக சேட்டை செய்யும் போது லேசாக தண்டிப்பதும் சகஜம் தான்.
ஆனால், அக்காணொளியில், அச்சிறுமியை அவரது பாட்டி குச்சி ஒன்றால் கடுமையாக அடித்து நொறுக்குகிறார். அச்சிறுமி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தும் அடி மிகக் கடுமையாக விழுகிறது. பின்னர் சட்டையைக் கழற்றி வேறு சட்டை கொடுத்து அணியச் சொல்லிவிட்டு பின் மீண்டும் அடிக்கத் தொடங்குகிறார்.
இக்காணொளி வெளியான சில நிமிடங்களில், பூச்சோங்கில் உள்ள அவரது இல்லத்தின் முன் பொதுமக்கள் கூடி விட்டனர்.
பின்னர், காவல்துறையினர் வந்து அச்சிறுமியை மீட்டதோடு, அவரது பாட்டி என நம்பப்படும் பெண்ணை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அப்புகைப்படங்கள் மற்றும் காணொளியும் பேஸ்புக்கில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
பேஸ்புக்கில் காணொளி வெளியாகி அடுத்த சில நிமிடங்களில் உடனடி நடவடிக்கையில் இறங்கிய பூச்சோங் மக்களுக்கும், காவல்துறைக்கும் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.