Home நாடு மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : தேடுதல் நிறுத்தம் – பந்தாய் டாலாமில் தொடர்கிறது!

மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : தேடுதல் நிறுத்தம் – பந்தாய் டாலாமில் தொடர்கிறது!

698
0
SHARE
Ad
மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன விஜயலெட்சுமி

கோலாலம்பூர்: கடந்த வாரம் நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இருப்பினும், பந்தாய் டாலாம் பகுதியில் இண்டா வாட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

முக்குளிப்பு வீரர்கள் மூலம் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நில அமிழ்வுப் பகுதியில் தேடுவது மிகவும் ஆபத்தானது என அறிந்தபின் தங்களின் தேடுதல் பணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகாவுக்கான தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

புதிய, மாற்று மீட்புப் பணிகள் குறித்து மாநகர் மன்றத்தின் தலைவருக்கும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தாபாவுக்கும் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முக்குளிப்பு வீரர்களுக்கு ஆபத்து என்பதுடன் முக்குளிப்பு வீரர்களுக்கு பல தடைகள் இருப்பதாகவும் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

இதற்கிடையில் மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி, நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு வருகை தந்து, நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணைத் தேடும் மீட்பு நடவடிக்கை குறித்து விசாரித்தறிந்தார்.

மோப்ப நாய்களும் இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணி இன்றுடன் 8 நாட்களாக நீண்டு கொண்டிருக்கிறது.

மீட்புக் குழுவினர் பந்தாய் டாலாம் இண்டா வாட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதிக்குச் செல்லும் சுமார் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி கழிவுநீர் குழாய்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) விஜயலெட்சுமி என்ற 48 வயது பெண்மணி தவறுதலாக 8 மீட்டர் ஆழமுள்ள மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நடந்து செல்லும்போது சாலையோர நில அமிழ்வில் விழுந்தார். அவரின் நிலைமை தெரியும்வரை அவரைத் தேடும்பணி நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழிக்குள் விழுந்த பெண்மணியின் செருப்புகள் மட்டும் கிடைத்த நிலையில் விஜயலெட்சுமியைத் தேடும் பணிகள் தீவிரமாகத் தொடரப்படுகின்றன.