Home நாடு மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : இந்தியத் தூதர் வருகை

மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : இந்தியத் தூதர் வருகை

567
0
SHARE
Ad
பி.என்.ரெட்டி

கோலாலம்பூர்: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி, இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு வருகை தந்து, கடந்த வாரம் நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணைத் தேடும் மீட்பு நடவடிக்கை குறித்து விசாரித்தறிந்தார்.

மதியம் சுமார் 3.50 மணியளவில் மற்றொரு தூதரக அதிகாரியுடன் வந்த பி.என். ரெட்டி, அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்கள் செலவிட்டார். அங்கு டாங் வாங்கி காவல் நிலைய அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர்.

இதற்கிடையில் மலேசிய கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் அதிகாரிகள் நில அமிழ்வு நிகழ்ந்த இடத்திற்கு வந்து, தடயங்களைக் கண்டறிய நிலத்தை ஊடுருவும் ரேடார் கருவியைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது.

#TamilSchoolmychoice

மோப்ப நாய்களும் இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணி இன்றுடன் 7 நாட்களாக நீண்டு கொண்டிருக்கிறது.

நில அமிழ்வு நிகழ்ந்த இடத்தில் ஒரு பகுதியில் ஏதோ ஒரு பொருள் தட்டுப்படுவதாகவும், அது என்ன என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

மீட்புக் குழுவினர் பந்தாய் டாலாம் இண்டா வாட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதிக்குச் செல்லும் சுமார் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி கழிவுநீர் குழாய்களை ஆராய்ந்துள்ளனர். தேடுதல் பணி தொடர்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) விஜயலெட்சுமி என்ற 48 வயது பெண்மணி தவறுதலாக 8 மீட்டர் ஆழமுள்ள சாலையோர நில அமிழ்வில் விழுந்தார். அவரின் நிலைமை தெரியும்வரை அவரைத் தேடும்பணி நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழிக்குள் விழுந்த பெண்மணியின் செருப்புகள் மட்டும் கிடைத்த நிலையில் விஜயலெட்சுமியைத் தேடும் பணிகளில் மேலும் தீவிரம் காட்டும் விதத்தில் குறுக்கிடும் பாறைகளை உடைப்பதற்கும், உடைபட்ட பாறைத் துகள்களை அகற்றுவதற்கும், அதிக சக்திவாய்ந்த இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் பொதுமக்கள் மஸ்ஜிட் இந்தியா பகுதியைத் தவிர்க்க முற்பட்டுள்ளதால், அங்கு வணிகங்கள் பாதிக்கப்பட்டதாக அங்கு வணிகம் செய்பவர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.