Home நாடு சாஹிட் – லியோவ் இடையில் மசீச பிரதிநிதிகள் குறித்து மோதல்

சாஹிட் – லியோவ் இடையில் மசீச பிரதிநிதிகள் குறித்து மோதல்

948
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மசீசவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியது தேசிய முன்னணி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மசீசவுக்கும் அம்னோவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் மோதல்கள் தேசிய முன்னணியின் சீன வாக்கு வங்கியைப் பெரிதும் பாதிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் விவகாரத்தில் அமைச்சர் நஸ்ரி அசிசுக்கும், மசீச, கெராக்கான் தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் தற்போது அமைதியடைந்திருக்கும் நிலையில் துணைப்பிரதமர் தொடுத்த கடுமையான குறைகூறல்களாலும், அதற்கு மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் அளித்திருக்கும் பதில்களாலும் மீண்டும் சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) நெகிரி செம்பிலானில் உள்ள ரெம்பாவ் தொகுதிக்கு வருகை தந்த துணைப் பிரதமர் சாஹிட் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போது அங்கிருந்த மசீச பிரதிநிதி யார் எனக் கேட்டார். யாரும் எழுந்து நிற்காததைத் தொடர்ந்து மசீசவைக் கடுமையாகச் சாடினார்.

“நான் வருகிறேன் என்பதால் அல்ல. இதுபோன்ற தேசிய முன்னணி கூட்டங்களுக்கு அனைத்து தேசிய முன்னணி கட்சிகளும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும்” எனக் குறிப்பிட்ட சாஹிட் தொடர்ந்து, மஇகா, கெராக்கான், மைபிபிபி கட்சிகளின் பிரதிநிதிகள் யார் எனக் கேட்டு, அவர்கள் வந்திருப்பதைச் சுட்டிக் காட்டி, அவர்களைக் கைத்தட்டி பாராட்டும்படி கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதிக்கு அதே மார்ச் 13-ஆம் தேதி இரவு வருகை தந்த சாஹிட் ஹாமிடி அங்கேயும் மசீச பிரதிநிதி யாரும் வராததைக் கண்டு ஆத்திரம் கொண்டார்.

“இரண்டு முறை இந்தத் தொகுதியில் மசீச போட்டியிட்டது. அப்போதெல்லாம் தேசிய முன்னணிக்காகப் பாடுபட்டது யார்? அம்னோ…அம்னோ…” என முழக்கமிட்ட சாஹிட் தொகுதிகள் மட்டும் கேட்கும் மசீச, அதற்காக உழைப்பதில்லை எனக் கடுமையாகச் சாடினார்.

மசீசவின் பதில்

இதைத் தொடர்ந்து மசீச சார்பில் ரெம்பாவ் கூட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பதில் தரப்பட்டுள்ளது.

மசீச தலைவர் லியோவ் தியோங் லாய்யும் உடனடியாக மசீசவைத் தற்காத்தார். “இதுபோன்று மசீசவைப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுவது முறையல்ல. தொடர்பு கொள்வதில் எங்கோ தவறுகள் நடந்திருக்கலாம். என்ன நடந்தது என்பதை முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்ளாமல், மசீசவைக் கடுமையாகச் சாடுவது நியாயமல்ல. நானாக இருந்தால் அவ்வாறு செய்திருக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

மசீச ரெம்பாவ் தொகுதித் தலைவர்கள் துணைப் பிரதமரின் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட லியோவ், நெகிரி செம்பிலான் மாநில மசீச தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

நெகிரி மாநில மசீசவை என்ன நடந்தது என்பதைக் கண்டறியுமாறு பணித்திருப்பதாகவும் லியோவ் கூறினார்.

மசீச பிரதிநிதிகள் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளாதது தொடர்பில் சாஹிட்டைச் சந்தித்திருப்பதாகவும் லியோவ் மேலும் விளக்கமளித்தார்.