Home கலை உலகம் பிக்பாஸ் 2 வீடு: பிரச்சினைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது!

பிக்பாஸ் 2 வீடு: பிரச்சினைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது!

414
0
SHARE

சென்னை – 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் வீடு கடந்த 3 நாட்களாக இயல்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. 17-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஓவியா, எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டு, வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். (ஓவியா ஆர்மிக்கு பெரிய ஏமாற்றம்)

ஓவியா விருந்தினராகத் தான் வந்திருக்கிறார் என்பதை சென்றாயனும், மஹத்தும் அவர் கொண்டு வந்த ஒரு பெட்டியை வைத்தே கண்டுபிடித்துவிட்டதால், அங்கேயே சஸ்பென்ஸ் உடைந்துவிட்டது.

பின், 16 போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படலம், படுக்கை, மெத்தைகளை பிரித்துக் கொள்வது, தலைவரைத் தேர்ந்தெடுப்பது என வழக்கமான செயல்பாடுகள் தான் நகர்ந்தது.

டேனியும், சென்றாயனும் தங்களது பெட்டிகள் வராமல் ரொம்பவே தவித்துப் போனார்கள். மஹத்திடம் மாற்று உடைகளை வாங்கிப் போட்டு சரிக்கட்டினார் சென்றாயன்.

ஆனால் உள்ளாடை இல்லாமல் தவித்த டேனியிடம், பொன்னம்பலம் அடிக்கடி வந்து “எங்கிட்ட புது ஜட்டி இருக்கு வேணுமா?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார். பொன்னம்பலம் அப்படி கேட்கும் போதெல்லாம் அவரை ஒருமுறை ஏற இறங்க பார்த்த டேனி, “ஒரு பெரிய மனுஷன் பேசுற பேச்சாயா இது?” என்றவாறே கடந்து சென்றார்.

ஒருவழியாக ஜனனி ஐயர் பிக்பாஸ் 2 வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மும்தாஜுக்கு இது முதல் ஏமாற்றமாக இருந்தது. வந்ததில் இருந்து கடுகடுவென இருந்த மும்தாஜுக்கு இந்த ஏமாற்றம் இன்னும் பெரிய கவலையைத் தந்ததோ என்னவோ? யாருக்கும் தெரியாமல் தனியே போல் அழுது கொண்டிருந்தார். அநேகமாக பிக்பாஸ் 2 வீட்டில் காயத்ரியின் இடத்தை மும்தாஜ் தான் நிரப்பப் போகிறார் என ஓரளவு கணிக்க முடிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரிந்திருக்கும் நிஜத் தம்பதியான தாடி பாலாஜியையும், நித்யாவையும் ஒரே வீட்டில் தங்க வைத்து முதல்நாளில் இருந்தே சுவாரசியம் தேட நினைத்த பிக்பாசுக்கு, சிறிது அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

காரணம், முதல்நாளே இருவரும் முறைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், இருவரும் மிக சகஜமாக ஒருவரையொருவர் எதிர்க்கொள்கிறார்கள்.

இப்படியே விட்டால் சரியாக வராதே என்று நினைத்த பிக்பாஸ், லக்ஜரி டாஸ்கில், “உங்களுக்கு இந்த வீட்டில் மிகவும் பிடித்த நபர் யார்?” என்ற கேள்வியை தலைவர் ஜனனி வைத்து பாலாஜியிடம் கேட்க வைத்தார்.

பாலாஜி சட்டென நித்யாவைக் கைகாட்டுவார் என எல்லோரும் எதிர்பார்க்க, அவரோ சென்றாயனைக் கைகாட்டித் தப்பித்துக் கொண்டார். இதனை எதிர்பார்க்காத சென்றாயன் சற்று நெகிழ்ந்து தான் போனார்.

அதேபோல், “இந்த வீட்டில் நீங்கள் வெறுக்கும் நபர் யார்?” என்ற கேள்வி நித்யாவிடம் சென்றது. நித்யாவும் மஹத்தை கைகாட்டினார்.

அதேபோல், “நீங்கள் டேட்டிங் செல்ல விரும்பும் பெண் யார்?” என்று கேள்வி ஷாரிக் ஹாசனுக்குச் செல்ல, அவர் ஐஸ்வர்யா டத்தாவைக் காட்டினார்.

பதிலுக்கு ஐஸ்வர்யா டத்தாவும், “இங்கே அழகான ஆண் யார்?” என்ற கேள்விக்கு ஷாரிக்கைக் குறிப்பிட்டு சமன் செய்தார்.

“உங்களை எரிச்சல் படுத்தும் நபர் யார்?” என்ற கேள்வி மும்தாஜிடம் கேட்கப்பட அவர் டேனியலைக் கூறினார். டேனியலின் முகம் சற்று கலவரமடைந்தாலும் சிரித்து மழுப்பினார்.

வந்த முதல் நாளில் இருந்தே ஜனனி ஒரு ஆர்வக் கோளாறாகவே பார்க்கப்பட்டு வரும் நிலையில், சரியாக அவருக்கு “யார் இங்கே அழகு?” என்ற கேள்வியை வைத்தார் பிக்பாஸ். உடனே “இங்கே நான் தான் அழகு” என்றார் விஷபாட்டில். ஆம்.. ஜனனிக்கு விஷபாட்டில் என்று தான் சக பிக்பாஸ் போட்டியாளர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். ஜனனி இப்போது இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் கூட, பின்னாளில் இந்தப் பெயர் தான் அவரை அழ வைக்கப்போகிறது என்பது பார்வையாளர்களால் உணர முடிகின்றது.

இவர்களோடு எப்போதும் தொகுப்பாளர் போலவே செயற்கைத்தனமாகப் பேசும் மமதி, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் யாஷிகா, பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் பாட்டுவாத்தியராக இருக்கும் அனந்த் வைத்தியநாதன், அவரிடம் தீவிரமாக பாட்டுக் கற்றுக் கொள்ளும் பொன்னம்பலம், தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ரித்திகா, கொஞ்சம் கெத்து காட்டியே வலம் வரும் ரம்யா, சத்தமே இல்லாமல் இருக்கும் மஹத் என பிக்பாஸ் வீட்டில் புயலுக்கு முன் அமைதி போல எல்லோரும் அவரவர் சுயரூபங்களை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு இல்லாமல் இயல்பாக இருக்கின்றனர்.

என்றாலும், பிக்பாஸ் சீசன் 1-ல் ஏற்பட்ட முட்டைப் பிரச்சினை பிக்பாஸ் 2-விலும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.

அதற்கான பிள்ளையார் சுழியை தான் 800 புள்ளிகள் கொடுத்து, லக்ஜரி டாஸ்கை உருவாக்கியிருக்கிறார் பிக்பாஸ்.

இந்த டாஸ்கிலேயே தன்னை விரும்புபவர்களையும், வெறுப்பவர்களையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் தெரிந்து கொண்டுவிட்டதால், மிக விரைவில் பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

– செல்லியல் பார்வை

 

Comments