Home நாடு “கடவுளால் படைக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகள்” – ‘ஜனனம்’ வெளியீட்டில் திலா லக்‌ஷ்மண்

“கடவுளால் படைக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகள்” – ‘ஜனனம்’ வெளியீட்டில் திலா லக்‌ஷ்மண்

859
0
SHARE
Ad

11160582_10152772307107409_4455522307969960378_nகோலாலம்பூர், ஏப்ரல் 23 – மலேசியாவின் புகழ்பெற்ற பாடகி திலா லக்‌ஷ்மணின் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘ஜனனம்’ பாடல் அறிமுக விழா, மற்றும் குறுந்தட்டு வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் மெனாரா 1-ல் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எம்.கேவியஸ் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

மலேசியாவின் பிரபல இசையமைப்பாளர் சரண் நாராயணனின் பாடல்வரிகளிலும், இசையிலும் உருவான இப்பாடலை, திலா லக்‌ஷ்மண் குழுவினர் மேடையில் நேரடியாகப் பாடியதோடு, அரங்கிலிருந்த பார்வையாளர்களுக்கு நீல நிற ஒளிரும் குச்சி ஒன்றையும் வழங்கி அனைவரையும் ஒன்றிணைத்தனர்.

#TamilSchoolmychoice

குறிப்பாக, ஆட்டிசம் என்றால் என்னவென்பதை மக்களுக்கு உணர்த்தும் படியாக, குழந்தையை கருவில் சுமக்கும் ஒரு தாய், அதைப் பெற்றெடுத்து பாசத்துடன் வளர்த்து வரும் பொழுது, ஒரு குறிப்பிட்ட வயதில் அக்குழந்தை மற்ற குழந்தைகளிடத்தில் இருந்து வித்தியாசப்படுவதை கண்டு வேதனையடைகிறாள். பின்னர் தனது குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிகிறாள்.

இந்த கருத்தை, கதாப்பாத்திரங்களை நடிக்க வைத்து காட்சி வடிவில் விளக்கியது பார்வையாளர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது.

பின்னர், இப்பாடல் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கும், ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

11015197_10206204931900461_3921590046743863433_n

இந்நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எம்.கேவியஸ் பேசுகையில், “ஆட்டிசம் குறைபாட்டால் தங்களின் குழந்தைகள் அவதிப்படுவதைக் கண்டு சில பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர். ஆனால், இத்தகைய குறைபாட்டை, எந்தெந்த பெற்றோர்களால் உணர்ந்து அக்குழந்தையை சிறப்பாக வளர்க்க முடியும் என்பதை அறிந்தே கடவுள் அவர்களுக்கு அவர்களை பிள்ளைகளாக கொடுத்துள்ளார்.”

“இயல்பாக இருக்கும் குழந்தைகளுக்கு ஈடாக அவர்களையும் வளர்க்க வேண்டும். ஆதே வேளையில் ‘ஆட்டிசம்’ குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்பாடலை உருவாக்கிய திலா லக்‌ஷ்மண் மற்றும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், இந்நிகழ்வில் பேசிய, ‘Pertubuhan Sayang Autisme Malaysia- PERSAMA’ என்ற அரசு சாரா இயக்கத்தின் நிறுவனரும், பாடகியுமான திலா லக்‌ஷ்மண்,

“ஆட்டிசம் குறைபாட்டால் பிறந்த குழந்தைகள் கடவுளால் படைக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகள்.அவர்களை மிகவும் அன்பாகவும், கவனமாகவும் வளர்க்க வேண்டும். அதே போல், ‘ஆட்டிசம்’ குறித்து சமூதாயத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

மேலும், இந்த பாடல் உருவாகக் காரணமாக இருந்தவர்களுக்கும், நிதி உதவி செய்த கேவியஸ் அவர்களுக்கும் திலா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் சரண், “ஜனனம் பாடலை முதன் முதலாக உருவாக்க நினைத்த திலா, தனது எண்ணங்களை என்னிடம் கூறினார். அந்த நேரத்தில் ஆட்டிசம் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனை ஒரு தாயாக அவர் பராமரிக்கும் விதம் கண்டு, அவர் கூறிய அனுபவங்களை வைத்து தான் பாடலை எழுதி, இசையமைத்தேன்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பிருத்விராஜ், பெர்சமா இயக்கத்தின் ஆலோசகர் டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர், மலேசிய மக்கள் சக்தி தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன், அஸ்ட்ரோ, டிஎச்ஆர், மின்னல் எப்எம் என நாட்டின் முன்னணி ஊடகங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், ஏராளமான மலேசியக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

-ஃபீனிக்ஸ்தாசன்