Home இந்தியா எம்.எஸ்.வி.யின் பாடல்கள் மக்கள் மனதில் என்றும் ஒலிக்கும்:ஜெயலலிதா இரங்கல்

எம்.எஸ்.வி.யின் பாடல்கள் மக்கள் மனதில் என்றும் ஒலிக்கும்:ஜெயலலிதா இரங்கல்

636
0
SHARE
Ad

Jayalalithaa assets caseசென்னை, ஜூலை 14- எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்கள் மக்கள் மனதில் இன்றும், என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ். விஸ்வநாதன் மறைவுக்கு ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

‘மெல்லிசை மன்னர்’ என்றும் ‘எம்.எஸ்.வி’ என்றும் அன்புடன் அழைக்கப்படுபவரும் தமிழ்த் திரை உலகில் மாபெரும் சகாப்தமாக திகழும் பழம்பெரும் இசையமைப்பாளர், திரையுலக இசை மேதை  எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் இன்று (14.7.2015) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனையும்,  பெரும் துயரமும் அடைந்தேன்.

#TamilSchoolmychoice

அன்பும், அடக்கமும், எளிமையும், இறைப் பற்றும் மிகுந்த எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசைப் பயணம் அவரது 13-வது வயதிலேயே ஆரம்பித்து விட்டது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த “ஜெனோவா” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிய  எம்.எஸ். விஸ்வநாதன், “பணம்” திரைப்படம் முதல் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் வரை ராமூர்த்தி அவர்களுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனியாக இசை அமைத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு  மெட்டமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலான “நீராருங் கடலுடுத்த” என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் திரு எம். எஸ். விஸ்வநாதன்  இசையில், நான் “சூரியகாந்தி” என்ற திரைப்படத்தில் ‘ஓ மேரி தில்ரூப’; “அன்பைத்தேடி” என்ற திரைப்படத்தில் ‘சித்திர மண்டபத்தில்’; “திருமாங்கல்யம்” என்ற படத்தில் ‘உலகம் ஒரு நாள்’  போன்ற மனதைக் கவரும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளேன்.

1965-ஆம் ஆண்டு நான் நடித்து வெளி வந்த “வெண்ணிற ஆடை”  திரைப்படத்தில் உள்ள “கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல” என்ற பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் பிரபலமடைந்தது. அதே ஆண்டில் வெளி வந்த, நான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்-உடன் இணைந்து நடித்த முதல் படமான “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் காலத்தால் அழியாத புகழ் பெற்ற “நாணமோ”, “அதோ அந்த பறவை” போல பல பாடல்கள் சாகா வரம் பெற்ற பாடல்களாக அமைந்திருந்தன.

இவர் இசையமைத்த பாடல்கள் அன்றும்,  இன்றும், என்றும்  மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது.

பெரும் புகழுக்கும் பெருமைக்கும் உரிய  திரு எம். எஸ் விஸ்வநாதன் அவர்கள் பல விருதுகள் பெற்றிருந்தாலும் அவருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படாதது எனக்கு என்றும் மனவருத்தத்தை அளித்து வந்தது.

நான் 1991-ஆம் ஆண்டு  முதலமைச்சராகப் பதவியேற்றது முதல்  விஸ்வநாதன் அவர்களுக்கு பத்மவிபூஷன் விருது வழங்க  மத்திய அரசிடம் பரிந்துரை செய்து வருகிறேன். ஆயினும், மாநில அரசுக்குச் சாதகமாக எதையும் செய்யாத மத்திய அரசுகள் இதற்கும்  செவிசாய்க்கவில்லை.

“கலைமாமணி விருது”  பெற்ற   திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் எண்ணற்ற விருதுகளுக்குச் சொந்தக்காரர்.  தமிழ் இசை சங்கம் 2003-ம் ஆண்டு இவருக்கு  “இசைப் பேரறிஞர்” பட்டம் வழங்கி பெருமை சேர்த்தது. ‘தென்னிந்திய பிலிம்பேர் விருது’, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது எனப் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

எம். எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு 2012-ஆம் ஆண்டு “திரை இசைச் சக்கரவர்த்தி” என்ற பட்டத்தை நான் வழங்கி அவரை கௌரவித்தேன். அன்றைய விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற  பாடலைத் தனது  குழுவினருடன் இணைந்து இசையமைத்துப் பாடியது இன்றும் என் மனக் கண் முன் உள்ளது.

தனது ஈடு இணையற்ற இசை வல்லமையால்  தமிழ் திரைப்பட உலகுக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கும்  பெருமை சேர்த்த எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மறைவு திரைப்படத் துறைக்கும், கலை உலகிற்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.