திருவனந்தபுரம், ஜூலை17- தமிழ் நாட்டில் விளையும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாகக் கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை ஒட்டி, தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் ஆரியங்காவு சோதனைச் சாவடி வழியாகச் சென்று வருவோரிடம், தமிழக விளை பொருட்களில் நச்சுத் தன்மை இருப்பதாகச் சொல்லித் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
சோதனைச் சாவடியில் நின்று கொண்டு, சோதனைச் சாவடி ஊழியர்களும், கேரளப் பள்ளி மாண்வர்களும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து கொண்டு வரப்படும் உணவுப் பொருட்களில், அதுவும் குறிப்பாகக் காய்கறிகளில் அதிகளவு நச்சுத் தன்மை இருப்பதாக இத்தகைய பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னணியில் கேரள அரசும் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஏற்கனவே, இத்தகைய குற்றச்சாட்டு எழுந்த போது, அதற்குத் தமிழக அரசின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்தை அடுத்து கேரள அரசு அதனை மறுத்தது.
இந்நிலையில், தற்போது கேரளப் பள்ளி மாணவர்களைக் கொண்டு தமிழக விலை பொருட்களுக்கு எதிராகப் பரப்புரையை மேற்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக விளைபொருட்களை முடக்கும் செயலாக இது கருதப்படுகிறது.