கோலாலம்பூர் – அஸ்வினி தமிழ்செல்வன் என்ற 20 வயது மலேசிய மாணவி இன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடைபெறும் பெண்களின் மகத்துவம் குறித்த சிறப்பு கருத்தரங்கில் உலகின் முக்கியப் பிரபலங்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
வங்கதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஆசியன் மகளிர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்கும் முதல் மலேசிய மாணவி அஸ்வினி என்பது அவரது முந்தைய சாதனை.
காரணம், ரவாங்கில் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தவரான அஸ்வினிக்கு, பல கடின நேர்முகத் தேர்வுகளைக் கடந்த பிறகே அக்கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. மலாயா வங்கி அறக்கட்டளை தான் அஸ்வினியின் படிப்பிற்கான செலவுகளைக் கவனித்துக் கொள்கிறது.
அண்மையில், சமூக ஆர்வலர் டத்தின் மரினா மகாதீர் அஸ்வினியைப் பற்றிய தகவல்களை நட்பு ஊடகங்களின் வழியாகப் பகிர்ந்தார். அவரை மிகவும் அமைதியாக, புத்திசாலியான பெண் என்றும் வர்ணித்திருந்தார்.
உலக அரங்கில் பேசும் அளவிற்கு உயர்ந்து மலேசிய இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கும் அஸ்வினிக்கு செல்லியலின் வாழ்த்துகள்!