கொழும்பு – இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரில், அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, உலக நாடுகள் கொடுத்த பல்வேறு நெருக்கடிகளால் அப்போதைய ராஜபக்சே தலைமையிலான அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகம தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டது.
அந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது, இலங்கை இராணுவ வீரர்கள் போர் குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான். இந்த போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான நீதி விசாரணை நடத்த வேண்டும்.”
“மேலும், இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றம் பற்றி விசாரிக்க தனி பிரிவு அமைக்க வேண்டும். நம்பத் தகுந்த விசாரணை நடக்க வேண்டுமானால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு கண்டிப்பாக வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழு, இலங்கையில் நடந்த போர்குற்றங்களை வெளி உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கிய சேனல்-4-ன் ‘நோ ஃபயர் ஜோன்’ (No Fire Zone) ஆவணப்படத்தில் இருக்கும் காட்சிகளும் உண்மை தான் என்றும் தெரிவித்துள்ளது.