Home Featured வணிகம் “ஐ-போன் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை வெளியிட வேண்டும் கோரிக்கை – அமெரிக்க அரசாங்கம் கைவிட வேண்டும்” –...

“ஐ-போன் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை வெளியிட வேண்டும் கோரிக்கை – அமெரிக்க அரசாங்கம் கைவிட வேண்டும்” – டிம் குக்

954
0
SHARE
Ad

timcook-confவாஷிங்டன் – திங்கட்கிழமையன்று தனது அலுவலகப் பணியாளர்களுக்கு அனுப்பிய  இணைய அஞ்சலில் சான் பெர்னார்டினோ தாக்குதல் சம்பவத்தில் தாக்குதல்காரனின் ஐ-போனின் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை ஆராய்வதில் எஃப்.பி.ஐ. புலனாய்வுத் துறைக்கு ஆப்பிள் நிறுவனம் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அரசாங்கம் கைவிட வேண்டும்” என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்தது என்ன?

கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் சைட் ரிட்சுவான் பாருக் மற்றும் அவரது மனைவி தாஷ்ஃபின் மாலிக் இருவரும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு, 22 பேர் காயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

இதனை விசாரித்த அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ (FBI-Federal Bureau of Investigations) இது பயங்கரவாதச் செயல் என்பதையும், பயங்கரவாதிகள் இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியினர் என்பதையும் கண்டுபிடித்ததுடன், அவர்கள் பயன்படுத்திய ஐ-போன் ஒன்றின் மறைகுறையீடாக்கம் (Encryption) என்ன என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்மூலம், தாக்குதல்காரர்களின் பின்புலங்கள், தாக்குதல் குறித்த தகவல்களைப் பெற முடியும் என எஃப்.பி.ஐ நம்பிக்கை கொண்டுள்ளது.

iphone_5s_அந்த ஐ-போனின் தொழில்நுட்ப உள்ளடக்கத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தங்களுக்கு உதவ வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது எஃப்.பி.ஐ. ஆனால், அதற்கு ஒப்புக் கொள்ள ஆப்பிள் மறுத்து விட்டது.

இதனால், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆப்பிள் உதவ மறுக்கின்றது என்பது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், ஓரிரு பயங்கரவாதிகளின் ஐ-போன்களைத் திறந்து, அதன் மறைக்குறையீடாக்கத்தைக் கண்டுபிடிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு உதவுவதன் மூலம், மில்லியன் கணக்கானோரின் இரகசியத் தகவல்கள் கசிவதற்கும், அவர்களுக்குத் தெரியாமலேயே அவை தெரிந்து கொள்ளப்படுவதற்கும் தாங்கள் துணைநிற்க விரும்பவில்லை என ஆப்பிள் நிறுவனம் ஆணித்தரமாக வலியுறுத்தி விட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ வழக்கு தொடுக்க, நீதிமன்றமும் அந்த மறைக்குறையீடாக்கத்தைக் கண்டுபிடிக்க ஆப்பிள் நிறுவனம் எஃப்.பி.ஐக்கு உதவ வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அந்த நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றுவதற்கு ஆப்பிள் நிறுவனம் மறுத்து விட்டது.

apple - iphone 6cவணிக நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுகின்றது, பயங்கரவாதத்தை துடைத்தொழிக்க – அதற்கான விசாரணைகளில் உதவ – ஆப்பிள் நிறுவனத்திற்கு அக்கறையில்லை என்பது போன்ற குறைகூறல்களை எஃப்.பி.ஐ முன்வைத்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து ஒரு வணிக நிறுவனம் பயங்கரவாதப் போராட்டத்தில் துணை நிற்க வேண்டுமா – தனி மனித உரிமைகள் அதற்காக பலியிடப்பட வேண்டுமா – ஆப்பிள் நிறுவனம் இறுதிவரை பிடிகொடுக்காமல் மறுத்துவிட்டால்- அதனால் ஏற்படக் கூடிய சட்டப் பிரச்சனைகள் என்ன – தனிமனித உரிமைகள், இரகசியங்கள் முக்கியமா, தேசியப் பாதுகாப்பு முக்கியமா –

என சங்கிலிக் கோர்வை போல் பல்வேறு கேள்விகள், சர்ச்சைகள், விவாதங்கள் தற்போது அமெரிக்காவை ஆட்டிப் படைத்து வருகின்றன.

டிம் குக்கின் கடிதம்

apple-ceo-timcookஇந்த சூழலில்தான் திங்கட்கிழமை டிம் கும் தனது பணியாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் “பயங்கரவாதிகளை நாங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. அவர்களுக்கு நமது அனுதாபமும் இல்லை. என்றாலும், நீதிபதியின் உத்தரவைப் பின்பற்றுவது என்பது சட்டவிரோதமானது எனக் கருதுகின்றோம்” எனக் கூறியுள்ளார்.

“ஆனால், இது அரசாங்கத்திற்கு இருக்கும் அதிகாரங்களை மீறிய ஒரு செயல் என்றும் இதில் ஒத்துழைப்பது ஓர் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தித் தந்ததாக முடிந்து விடும். ஐபோனின் மறைக்குறியீடாக்கத்தைப் பின்புற வாசல் வழியாக அணுகுவதற்கும் கண்டுபிடிப்பதற்கும் இது ஒப்பானது” என்றும் விளக்கியுள்ளார்.

“இது ஒரு தனி ஐ-போனைப் பற்றியதோ, ஒரு தனி விசாரணை குறித்ததோ மட்டுமல்ல. மாறாக, சட்டத்தை முறையாகப் பின்பற்றும் மில்லியன் கணக்கான மக்களின் உள்ளடக்கத் தகவல் இரகசியங்களைப் பற்றியது. அவர்களின் தனிமனித உரிமைகளை இது பாதிக்கின்றது. அதனால்தான் நாங்கள் பகிரங்கமாக இதுபற்றி பேச வேண்டியுள்ளது” என்றும் டிம் குக் கூறியுள்ளார்.

-செல்லியல் தொகுப்பு