கோலாலம்பூர் – சிவகுரு கடத்தப்பட்டு ஆறு நாட்கள் ஆகியும், அவர் கடத்தப்பட்டதை நேரில் பார்த்த முதன்மை சாட்சியை காவல்துறை ஏன் இன்னும் விசாரணை செய்யவில்லை என நேற்று வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கிளந்தான் ஜெலியில் சிவகுருவை, மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்றனர்.
அவரைக் கடத்துவதற்காக அந்த மர்ம நபர்கள் பயன்படுத்தியது தேசிய காவல்படைத் தலைவர் காலிட் அபு பக்கர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கார் தான் என கிளானா ஜெயா பிகேஆர் செயலாளர் எஸ்.முரளி கூறியதையடுத்து இந்த விவகாரத்தில் காவல்துறை மீது சந்தேகம் கிளம்பியது.
அதேவேளையில், இந்தக் கடத்தல் சம்பவத்தில் முக்கிய சாட்சியான சிவகுருவின் சகோதரர் ஏ.பாலகுரு, கடத்த நடந்த போது கடத்தல்காரர்களிடம் பேச முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவர்கள் புக்கிட் அம்மானின் போதைப் பொருள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நேற்று கோலாலம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜசெக பூச்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த், “சிவகுரு கடத்தப்பட்டு ஆறு நாட்களாகியும் முதன்மை சாட்சியான சிவகுருவின் சகோதரர் பாலகுருவை காவல்துறை அழைத்து விசாரணை செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களை காவல்துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்ட அவர்கள் பயன்படுத்திய ஹைலக்ஸ் இரக காரின் உண்மையான உரிமையாளர் யார்? என்று சிவகுருவின் குடும்பத்தினர் கேள்வி எழுப்புவதாகவும் கோபிந்த் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த கடத்தல் சம்பவத்தில் காவல்துறையை தொடர்புபடுத்த வேண்டாம் என்று ஐஜிபி காலிட் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.