சென்னை – மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக., 124 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், மக்கள் நல கூட்டணி கட்சிகள் 110 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல கூட்டணியைச் சேர்ந்த வைகோ, ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டில் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தேமுதிக உடனான தொகுதி பங்கீடு குறித்து இன்று முடிவு செய்யப்படும் எனவும், முடிவு செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறினார்.
விஜயகாந்துடனான சந்திப்பிற்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 110 இடங்களில் மக்கள் நல கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தேமுதிக.,வுடன் கூட்டணி அமைத்தாலும் மக்கள் நல கூட்டணியின் பெயர் மாற்றப்படாது எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணி குறித்து தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.