Home Featured தமிழ் நாடு கவனிக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள் # 2 – நீக்கப்பட்டு கட்சிக்குத் திரும்பிய முன்னாள் டிஜிபி நட்ராஜ்...

கவனிக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள் # 2 – நீக்கப்பட்டு கட்சிக்குத் திரும்பிய முன்னாள் டிஜிபி நட்ராஜ் (மைலாப்பூர் தொகுதி)

853
0
SHARE
Ad

சென்னை – அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள, பிரபலமான, கவனிக்கப்படுகின்ற வேட்பாளர்கள் யார் என்ற வரிசையில் தமிழக மக்களின் கவனத்தைத் தன்பக்கம் திசை திருப்பியுள்ள இன்னொருவர் முன்னாள் போலீஸ் டிஜிபி (டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ்) நட்ராஜ்.

கடந்த டிசம்பரில் ஒருநாள், சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் தொடர்பில், தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று நடத்திய விவாதம் ஒன்றில் நடராஜ் என்பவர் அரசு அதிகாரிகள் ஒழுங்காகச் செயல்படவில்லை என தொலைபேசி வழி குற்றம் சாட்டினார். அப்போது அந்தத் தொலைக்காட்சி அலைவரிசை காட்டிய புகைப்படத்தில் இருந்தவர் முன்னாள் டிஜிபியும் அதிமுகவில் தீவிரமாக செயலாற்றி வந்தவருமான நட்ராஜ் (படம்).

Natraj-former DGP-அடுத்த நாளே, அவரை கட்சியிலிருந்து நீக்கி கடிதம் வழங்கினார் ஜெயலலிதா. அதிமுக தரப்புகள் அதிர்ச்சியில் நிலைகுத்தின. காரணம், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய முன்னாள் காவல் துறை அதிகாரிகளில் ஒருவராகப் பார்க்கப்பட்டவர் நட்ராஜ்.

#TamilSchoolmychoice

ஆனால், அடுத்த நாள் நடந்தது இன்னொரு அதிசயம். தொலைக்காட்சி அலைவரிசை காட்டியது தவறான புகைப்படம் என்றும், பேசியவர் இன்னொரு நட்ராஜ் என்றும் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவிக்க, உண்மையான-அசல்- நட்ராஜூம் முன்வந்து பேசியது நான் அல்ல என அறிக்கை விட, அவரை நீக்கும் கடிதத்தை மீட்டுக் கொண்டார் ஜெயலலிதா.

அந்த நட்ராஜ் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர், நம்பிக்கையானவர்தான் என்பதற்கு உதாரணமாக தற்போது அவருக்கு சென்னை மைலாப்பூர் தொகுதி வழங்கப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே, இரண்டு முறை இதே மைலாப்பூர் தொகுதியில் அதிமுகதான் வென்றிருக்கின்றது என்பது, நட்ராஜூக்கு சாதகமான  இன்னொரு அம்சம். ஆனாலும், சென்னை வெள்ளம் காரணமாக, சென்னை சட்டமன்றத் தொகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாக இருக்காது என்ற கருத்தும் நிலவுகின்றது.

காவல் துறை அதிகாரியாக இருந்தவர் என்றாலும், இசை, கர்நாடக சங்கீதம், கலைகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட நட்ராஜ் தொடர்ந்து குமுதம் வார இதழில் நகரில் நடக்கும் இசை,நடன நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதி வருபவர்.

தமிழக போலீஸ் துறை குறித்து நன்கு அறிந்தவர் என்பதால், பாதுகாப்பு அம்சங்கள், காவல் துறை தொடர்பான விவகாரங்களில் ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கி வருபவர் என்ற முத்திரையும் நட்ராஜூக்கு உண்டு.

அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நட்ராஜூம் மைலாப்பூரில் வென்றால், அவர் அமைச்சராகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-செல்லியல் தொகுப்பு