கோலாலம்பூர் – ‘இஸ்லாமும்-இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் ஆற்றவிருக்கும் உரை குறித்து பல்வேறு தரப்புகள் எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவித்து வரும் வேளையில், நாட்டின் முன்னணி இந்து இயக்கங்களுள் ஒன்றானஇந்து தர்ம மாமன்றமும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
“இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியத்தின் தலைவர் டாக்டர் ஜாகிர் நாயக் எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம், தேதி மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்திலும் ( UMT ) 17 ஆம் தேதி மலேசிய தொழில்நுட்ப மலாக்கா பல்கலைக்கழகத்திலும் ( UTeM ) இஸ்லாமிய சமய பிரச்சாரம் நடத்தவுள்ளார். இதனை சமூக வலைத்தளமான வாட்ஸ் எப் வாயிலாக நமக்கு கிடைக்கப் பெற்ற மின் அறிக்கை மூலம் அறியப்பெற்று வருத்தம் அடைந்தோம். பிற சமயத்தைச் சாடி, குறிப்பாக இஸ்லாமியத்தையும் இந்து சமயத்தையும் ஒப்பிட்டு பேசுவதை இச்சொற்பொழிவின் தலைப்பாக கொண்டுள்ளார். இது போன்றே கடந்த 29 செப்டம்பர் 2012 ஆம் தேதி ஷா ஆலாமில் இருக்கும் யூஐடிஎம் பல்கலைக்கழகத்தில் ( UITM ) நிகழ்த்திய தமது சொற்பொழிவில் இந்து மற்றும் கிறிஸ்துவ சமயத்தை வெளிப்படையாக அவமதித்து பேசி உள்ளார். முஸ்லீம் மாணவர்களுக்கு மத வெறியை தூண்டும் நோக்கத்துடன் இஸ்லாமியத்துடன் ஒப்பிட்டு இந்து, கிறிஸ்துவத்தின் எதிர்மறையான கருத்துக்களை தமது சொற்பொழிவில் வழங்கினார். நமது பிரதமர் அறிமுகப் படுத்தியுள்ள ஒரே மலேசிய திட்டதிற்கு இது முற்றிலும் புறம்பான செயல் என்பது யாவரும் அறிந்ததே. இது நமது நாட்டில் அரசியலமைப்பு சட்டத்திற்கும் புறம்பானது” என இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
“கைதட்டல் மற்றும் பாராட்டுதல் பெறும் நோக்கத்தோடு மற்ற மதங்களை கேலி செய்து சொற்பொழிவாற்ற அவருக்கு அதிகாரம் இல்லை. அவரது இந்த நாகரிகமற்ற நடவடிக்கைகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம் நாட்டின் தேசிய நிந்தனைச் சட்டத்தை மீறப்பட்டுள்ளது. “யுடியுப்” வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள சொற்பொழிவில் அவர் இந்து சமயத்தை அவமதித்ததும் அல்லது இந்து கோயில்கள் மற்றும் விக்கிரகங்கள் முறையான வழிபாடு இல்லை என்றும் இந்துக்கள் தவறான வழிபாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்று கூறியது மட்டுமல்லாது வேத வாக்கியங்களை அவர் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எள்ளி நகையாடியுள்ளார் என்பது குன்றின்மேலிட்ட விளக்கு போல அனைவரும் அறிந்த ஒன்றே” என்றும் இராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
இப்பொறுப்பற்ற சொற்பொழிவை கண்டித்து நாடு தழுவிய அளவில் மலேசிய இந்துதர்ம மாமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளஅவர், “மலேசியா பல்வேறு சமயங்களைச் சார்ந்த பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு திருநாடு. நமது இத்தாய்திருநாட்டில் நம் முன்னோர்கள் கடைப் பிடித்த நம்பிக்கைகளையும் கலாச்சாரத்தையும் பேணிக்காத்து நம்மிடையே இருக்கும் வேற்றுமைகளை மதித்து ஏற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே, ஒரு குறிப்பிட்ட இனம் மற்றும் மதத்தை எள்ளி நகையாடும் வகையில் எந்த அறிக்கையும் அல்லது சொற்பொழிவும் நடக்குமாயின் அது நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு ஆபத்தாக கருதி டாக்டர் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறோம்” என்றும் இராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
“கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் சர்ச்சைக்குரிய சமய விரிவுரை மற்றும் சொற்போழிவுகளால் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் தடை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஷா ஆலாமில் நடந்தேறிய சொற்பொழிவில் அவர் கண்டிப்பாக நமது தேசிய நிந்தனை சட்டத்தை மீறியுள்ளார் என்பது வெள்ளிடை மலையாகும். ஆகவே அப்பிரச்சினையை விசாரணை செய்து தீர்வுக்கொள்ளும் வரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் விசா அனுமதியை நிறுத்தும்படியும் அல்லது இந்நாட்டில் அவருக்கு சொற்பொழிவாற்ற அனுமதி வழங்கபடக்கூடாது என்பதையும் வலியுறுத்தி மாமன்றம் மலேசிய உள்துறை அமைச்சிற்கும் கல்வி அமைச்சிற்கும் அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றும் இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது..
“இவரின் இந்த முறையற்ற பேச்சு நமது தேசிய கோட்பாடுகளில் “கடவுள் நம்பிக்கை” எனும் முதல் கோட்பாடை களங்கப்படுத்தியமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய உள்துறை அமைச்சு மற்றும் வர்த்தக குற்றங்கள் புலனாய்வுத் துறையை வேண்டிக்கொள்கிறோம். நமது இந்த கோரிக்கையையும் நாட்டின் நல்லிணக்க ஒற்றுமை உணர்வையும் கருத்தில்கொண்டு மலேசிய உள்துறை அமைச்சு தீவிரமாக உரிய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய இந்துதர்ம மாமன்றம் கேட்டுக்கொள்வதோடு மலேசியாவில் இருக்கும் இதர ஏழு தலையாய இந்து சமய இயக்கங்களோடும் இணைந்து கேட்டுக்கொள்கின்றனர்” என்றும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.