கோலாலம்பூர் – இந்தியாவில் இருந்து வந்திருந்த இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக், அண்மையில் திரெங்கானு மாநிலத்தில் சொற்பொழிவாற்றினார். அந்த நிகழ்ச்சியில் திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானும் கலந்து கொண்டார்.
அப்போது அகமட் ராசிஃப் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், ஜாகிர் நாயக் தனது இஸ்லாமிய ஆய்வு மையத்தை அமைக்க, திரெங்கானு மாநில அரசாங்கம் அவருக்கு மூன்று தீவுகளைப் பரிசளிப்பதாகத் தெரிவித்தார்.
திரெங்கானு அரண்மனையிடம் கலந்தாலோசிக்காமல் அகமட் ராசிஃப் தன்மூப்பாக வெளியிட்ட அறிவிப்பால் தான், மனக்கசப்பு ஏற்பட்டு அவரது ‘டத்தோஸ்ரீ’ உள்ளிட்ட பட்டங்கள் பறிக்கப்பட்டதாக ‘சீனாபிரஸ்’, ‘ப்ரீ மலேசியா டுடே’ உள்ளிட்ட தகவல் ஊடகங்கள் ஆரூடங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே, அகமட் ராசிஃப் பதவி விவகாரத்தில் பிணக்குகள் இருந்து வந்தன.
திரங்கானுவின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் சைட், அகமட் ராசிஃபுக்கு எதிராகக் குற்றாச்சாட்டுகளைக் கூறி கொண்டிருந்தார்.
கடந்த மார்ச் மாதம், திரெங்கானு சட்டமன்றத்தில், அகமட் ராசிஃப்பின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் கொண்டு வந்தார். ஆனால் அத்தீர்மானம், திரெங்கானு சட்டமன்ற சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திரெங்கானுவில் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்கும் வாய்ப்பிருப்பதாகவும் தற்போது முன்னணி இணையதளங்களில் ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.