கூச்சிங் – கடந்த வியாழக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த 6 பேரும் மரணமடைந்துவிட்டதாக நம்பப்படுகின்றது.
இதுவரை, பலியான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்களில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும், தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் துறையின் துணையமைச்சருமான டத்தோ நோரியா காஸ்னோன், அவரது அமைச்சின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் சுந்தரன் அண்ணாமலை, நோரியாவின் மெய்க்காப்பாளர் அகமட் சோப்ரி ஹாருன் ஆகியோரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்று கண்டெடுக்கப்பட்ட துணையமைச்சர் டத்தோ நோரியாவின் சடலம், இன்று அதிகாலை பத்து 12, சுங்கை பூரோங்கில் தகனம் செய்யப்பட்டது.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இம்மூவரைத் தவிர, ஹெலிகாப்டரில் நோரியாவின் கணவர்அஸ்முனி அப்துல்லா, கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய செம்பனை வாரிய உறுப்பினருமான டத்தோ வான் முகமட் கைரில் அனுவார் வான் அகமட், ஹெலிகாப்டரைச் செலுத்திய விமானி கேப்டன் ருடோல்ப் ரெக்ஸ் ராகாஸ் ஆகிய மூன்று பேரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நான்காவது, ஐந்தாவதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதேவேளையில், 6-வது சடலத்தைத் தேடும் பணியும் நடைபெற்று வருகின்றது.