கூச்சிங் – கடந்த வியாழக்கிழமை சரவாக்கில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.
இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று துணையமைச்சர் டத்தோ நோரியா காஸ்னோனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதனையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், இன்று காலை 8.30 மணியளவில் மீட்கப்பட்ட இரண்டாவது சடலம் தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் துறையின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் சுந்தரன் அண்ணாமலையின் (படம்) சடலம் தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 11.45 மணியளவில் மூன்றாவதாக ஒரு சடலமும், மதியம் 3.26 மணியளவில் நான்காவது சடலமும், மாலை 6 மணியளவில் ஐந்தாவது சடலமும் மீட்கப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவதாகக் கண்டெடுக்கப்பட்ட சடலம், துணையமைச்சர் நோரியாவின் மெய்க்காப்பாளர் அகமட் சோப்ரி ஹாருன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது நான்காவது, ஐந்தாவதாக மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது.