கோலாலம்பூர் – தன்மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் அனைத்தும் பொய்யானவை – புனையப்பட்டவை என்று மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல் அழகப்பன் (படம்) தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
“டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும், முறைகேடுகளையும் நான் முழுமையாக, வன்மையாக மறுக்கின்றேன். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கெட்ட உள்நோக்கத்தோடும், என்மீது அவதூறு பரப்பும் வண்ணமும் மேற்கொள்ளப்பட்டவை. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையானவை என்றும் அவற்றில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றும் நான் ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகின்றேன்” என்றும் சக்திவேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு குத்தகையும் வழங்கப்படும்போது அதற்கென முறையான சில நடைமுறைகளும், விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன என்பதோடு அதை முடிவு செய்வது ஒரு தனி மனிதனின் கரங்களில் இல்லை. ரமணன் இந்த சமயத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும், பல கேள்விகளை உருவாக்குவதாகவும் இருப்பதாக நான் கருதுகின்றேன். அண்மையக் காலமாக ரமணன் வரிசையாக ஒவ்வொரு மஇகா தலைவர் மீதும் தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றார். அந்த வரிசைப் பட்டியலில் நான் கடைசியாக இடம் பெற்றிருக்கின்றேன்” என்பதையும் சக்திவேல் தனது இன்றைய அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
“மஇகா தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதற்கும், கட்சியில் குழப்பம் ஏற்படுத்துவதற்கும் ரமணன் தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். என்மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல், கட்சியின் நிலைத்தன்மையைக் குலைப்பதற்கு அவர் தொடர்ந்து செய்து வரும் இடையூறுகளில் ஆகக் கடைசியாக அரங்கேற்றப்பட்டிருக்கும் மற்றொரு நாடகமாகும். நமது முன்னோர்கள் பல நல்ல காரணங்களுக்காக சூட்டிய மஇகா என்ற பாரம்பரியமான நமது கட்சியின் பெயரை “மலேசிய கிரிமினல் கட்சி” என கீழ்த்தரமாக வர்ணிக்கும் அசிங்கமான நிலைமைக்கு தற்போது ரமணன் சென்றிருக்கின்றார்” என்றும் சக்திவேல் ரமணனை தனது அறிக்கையில் சாடியுள்ளார்.