இலண்டன் – நேற்று புதன்கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலகிய டேவிட் கேமரூனைத் தொடர்ந்து பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரசா மே, தனது அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார்.
- வெளியுறவுத் துறை அமைச்சராக இலண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜோன்சன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமுடியை ஒழுங்காக வாரிவிடாமல் உலா வருபவர் என்ற பெருமையைப் பெற்ற போரிஸ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனப் பிரச்சாரம் மேற்கொண்டவர். மக்களோடு ஒருவராக கலந்து பழகும் தன்மையால் இலண்டன் மேயராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தவர். மலேசியா வந்திருந்தபோதும், கோலாலம்பூர் தெருக்களில் சைக்கிளில் சுற்றி வந்ததோடு, கோலாலம்பூரின் இலகு இரயிலில் மக்களோடு ஒன்றாக அமர்ந்து பயணம் செய்தார்.
கோலாலம்பூர் வருகையின்போது இரயில் பயணத்தில் போரிஸ் ஜோன்சன் – அருகில் (வலது) கோலாலம்பூர் மாநகரசபைத் தலைவர் (டத்தோ பண்டார்)
- நிதியமைச்சராக பிலிப் ஹம்மோண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, வெளியுறவு அமைச்சராகவும், தற்காப்பு அமைச்சராகவும் பணியாற்றியவர். பிரதமருக்கு அடுத்த நிலையில் இரண்டாவது சக்தி வாய்ந்த அமைச்சராக நிதியமைச்சர்தான் பிரிட்டிஷ் அரசியலில் பார்க்கப்படுவார்.
- ஆம்பர் ரூட் என்ற பெண்மணி உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கின்றார். தெரசா மே பிரதமராவதற்கு முன் இந்தப் பொறுப்பைத்தான் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரங்களுக்கான தனி அமைச்சராக டேவிட் டேவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கென புதிய இலாகா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
- லியாம் ஃபோக்ஸ், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அனைத்துலக வாணிபத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்கின்றார்.
- தற்காப்பு அமைச்சராக மைக்கல் ஃபால்லோன் தொடர்ந்து அதே பதவியில் நீடிக்கின்றார்.