கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
“தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்சேவிற்கு நமது மலேசிய அரசாங்கம் முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும். மூவின மக்கள் வாழும் இந்த திருநாட்டில் ராஜபக்சே போன்றவர்கள் வருவதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு ஒப்பானது. இதனைக் கண்டித்து வெளிநாட்டு விவகாரங்களுக்கான சிறப்பு செயலாளர் டத்தோ முகமட் அஷிஜான் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றைக் அளித்திருக்கின்றோம் (படம்)” என மஇகா தேசிய இளைஞர் பகுதியின் செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
“இஸ்ரேல் பிரச்சனைக்கு ஒப்பானது இலங்கைத் தமிழர் பிரச்சனை. இன ரீதியாக தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். பிரான்ஸ் நாட்டில் ராஜபக்சே நுழைய முடியாது. அவருக்கு எதிராக கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜ.நா சபையிலும் இவர் மீதான குற்றத்திற்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவரை நாட்டிற்குள் அழைத்து வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமா?” என்றும் அர்விந்த் கிருஷணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புத்ரா ஜெயாவிலுள்ள மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சின் முன் மஇகா இளைஞர் பிரிவினர்…
புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறும் ஆசிய பசிபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்துலக மாநாட்டில் இவர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது. கடந்த 2012 ஆம் ஆண்டு டத்தோ கோகிலன் பிள்ளை அவர்கள் உள்துறை துணை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அப்போதைய மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் அவர்களின் தலைமையில் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, கோரிக்கை மனு அளித்து, இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை எடுத்துரைத்து ராஜபக்சேவை இந்த நாட்டிற்குள் நுழைய விடாமல் மலேசியத் தமிழர்கள் தடுத்தது குறிப்பிடத்தக்கது.
“அரசாங்க நிகழ்ச்சிகளிலோ அல்லது தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சகளிலோ இவர் கலந்து கொண்டால் அது இந்தியர்களிடையே குறிப்பாக தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மூவின மக்களையும் அரவணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு செல்லும் நமது அரசாங்கம் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதனை மையப்படுத்தியே வெளிநாட்டு விவகாரங்களுக்கான சிறப்பு செயலாளரிடம் மகஜர் கொடுத்ததாகவும், மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சனையின் தீவிரத்தை அரசாங்கம் உணர வேண்டும். அதோடு ராஜபக்சேவை இந்த நாட்டிற்குள் நுழையா வண்ணம் தடை விதிக்க ஆவண செய்ய வேண்டும்” எனவும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளதாகவும் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.