Home Featured நாடு “தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஒரே நாடு மலேசியா” – பன்னாட்டு தமிழாசிரியர்...

“தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஒரே நாடு மலேசியா” – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டைத் திறந்து வைத்து கல்வி அமைச்சர் உரை

1196
0
SHARE
Ad

200-yr-tamil-kalvi-conf-opening-mahdzir

சுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டை இன்று சனிக்கிழமை பிற்பகல் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சீர் காலிட் (படம்) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவுக்கு முன்பாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மலேசியாவில் தமிழ்க் கல்வி 200 ஆண்டு நிறைவை நாடுவதை முன்னிட்டு காணொளி வழியாக வழங்கிய வாழ்த்துச் செய்தி மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

200-yr-tamil-kalvi-conf-kamalanathan

வரவேற்புரை நிகழ்த்தும் கமலநாதன்…

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தமிழ்க் கல்வியின் 200-வது ஆண்டு நிறைவை விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதனும் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

கல்வி அமைச்சரின் உரைக்கு முன்பாக கமலநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கல்வி அமைச்சரின் உரை

மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய கல்வி அமைச்சர், சுதந்திரத்திற்கு பின்னர் நமது முன்னோர்கள் மொழிவாரியான கல்வியைப் பள்ளிகளில் தொடர்ந்து நிலைநிறுத்த, முடிவு செய்தனர் என்றும் அந்த புரிந்துணர்வையும், கடப்பாட்டையும் இன்று வரை தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது என்று கூறினார்.

200-yr-tamil-kalvi-conf-mahdzirமாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களுடன் கல்வி அமைச்சர் மாட்சீர் உரையாடுகின்றார்.

மொழிவாரியான பள்ளிக் கல்வி முறையை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அனைவருக்கும் பொதுவான ஒரே மாதிரியான கல்வி முறை அமுல்படுத்த வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வந்தாலும், நடைமுறையில் இருந்து வரும் புரிந்துணர்வை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம் என்றும் கல்வி அமைச்சர் மாட்சீர் காலிட் உறுதி கூறினார்.

பிரதமரும் இதே போன்ற நிலைப்பாட்டை விரும்புவதாகவும் மாட்சீர் மேலும் கூறினார்.

“ஐக்கிய நாட்டு சபையின் கல்வி அமைப்பான யுனெஸ்கோவில் நான் உறுப்பினராக இருக்கின்றேன். உலகிலேயே மலேசியா மட்டும்தான் இரண்டு விதமான கல்வி நடைமுறைகளைக் கொண்டுள்ள நாடு என யுனெஸ்கோவும் ஒப்புக் கொண்டுள்ளது” என்றும் மாட்சீர் தெரிவித்தார்.

200-yr-tamil-kalvi-logoஉலகில் மிகப் பழமையான செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை நான் அறிந்து வைத்திருக்கின்றேன். நமது நாட்டு தமிழ்க் கல்வி முறை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தும் நான் பெருமைப்படுகின்றேன். தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழை பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகளைக் கொண்ட ஒரே நாடு மலேசியாதான். இந்த நடைமுறையை நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வருவோம்” என்றும் மாட்சீர் உறுதி கூறினார்.

“தமிழை பயிற்றுவிக்கும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், தமிழ் மொழியை மேலும் வளப்படுத்துவதற்கும் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்றும் மாட்சீர் தனது உரையில் குறிப்பிட்டார். தேசியக் கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பகுதியாக இணைக்கும் முயற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம். 21-ஆம் நூற்றாண்டிலும், அதைத் தாண்டியும் தமிழைப் பயிற்றுவிப்பதில் – அது மிக உயர்ந்த நிலையில் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியிலான முடிவுகளாகட்டும் – அல்லது பாலர் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள், போன்ற நிலையிலான முடிவுகளாகட்டும் – அதனால் ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்” என்றும் மாட்சீர் உறுதியுடன் கூறினார்.

200-yr-tamil-kalvi-teachers-conferenceபள்ளித் தேர்வுகளிலும், பல்கலைக் கழகத் தேர்வுகளிலும் தமிழ் மொழி அங்கீகரிக்கப்படுகின்றது என்றும் சுட்டிக் காட்டிய மாட்சீர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு கூட, தமிழ்க் கல்வி மீதிலான நமது அனுபவங்களையும், எல்லைக் கோடுகளையும், நாட்டையும், வட்டாரத்தையும் தாண்டி எவ்வளவு தூரத்திற்கு நாம் விரிவு படுத்தலாம்  என்பதற்கான உதாரணம்தான் என்று நினைவூட்டினார்.

இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

முன்னதாக, இன்று சனிக்கிழமை காலை மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மாநாட்டுக்கு வருகை தந்து பங்கேற்பாளர்களிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.