சென்னை – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் தலைவர், எழுத்தாளர் எனப் பல துறைகளில் கோலோச்சிய இரா.செழியன் (வயது 95), தமிழகத்தின் வேலூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (6 ஜூன் 2017) உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த 1965-ம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரை மலேசியா வந்து பல இடங்களில் உரைகள் நிகழ்த்தியபோது அவருடன் செழியனும் மலேசியா வந்திருந்தார்.
அந்த வகையில் அண்ணாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டவர் செழியன்.
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் சகோதரர் தான் இரா.செழியன். மாணவராக இருந்த போதே திராவிட இயக்கத்தில் இணைந்து பேரறிஞர் அண்ணாவுடன் செயலாற்றினார்.
1962-ல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற செழியன், பின்னர் 1977-ல் தி.மு.க-விலிருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
பின்னர், 1988-ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் என்னும் கட்சி உருவான போது, அதில் செழியன் முக்கியப் பொறுப்பு வகித்தார்.
அதன் பின்னர், 2001-ம் ஆண்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக செழியன் அறிவித்தார். ஓய்வுக்குப் பின்னரும் கூட, விஐடி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த அறிவாற்றல் மிகுந்தவர் – திராவிட பாரம்பரியத்திலிருந்து வந்தவர் என்றாலும், அவரது சகோதரர் நெடுஞ்செழியன் திமுக, அதிமுகவில் முக்கியப் பொறுப்புகள் வகித்தவர் என்றாலும் – செழியனின் அரசியல் அணுகுமுறையும், சித்தாந்தங்களும் அவரைத் தனித்துக் காட்டின.
தமிழக அரசியல் சிலந்தி வலைக்குள் அவரால் இறுதி வரை செயல்பட முடியாமலே போயிற்று. நீண்ட காலம் அரசியல் பார்வையிலிருந்து அவர் ஒதுங்கியே இருந்தார்.
-செல்லியல் தொகுப்பு