Home வணிகம்/தொழில் நுட்பம் கனடா மாநாட்டில் மலேசியாவின் கஸ்தூரி இராமலிங்கம் கட்டுரை!

கனடா மாநாட்டில் மலேசியாவின் கஸ்தூரி இராமலிங்கம் கட்டுரை!

1651
0
SHARE
Ad

infitt-16 tamil internet conf- 537x 360தொரண்டோ – கனடாவின் தொரண்டோ நகரில் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் 16-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கத்தின் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது.

ஜோகூரில் உள்ள மாசாய் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரான கஸ்தூரி இராமலிங்கம் (படம்) இந்த மாநாட்டில் கலந்து கொண்டு “ஊடாடல், நகர்ப்படங்கள் கலந்த மின்னூல்கள் வழி குழந்தைகளுக்கான தமிழ்க்கல்வி” (Interactive and Animated story eBooks to help young children learn Tamil) என்ற தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து உரையாற்றுவார்.Kasturi Ramalingam

16-வது உலகத் தமிழ் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து படைக்கப்படவிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 ஆய்வுக் கட்டுரைகளில் கஸ்தூரி இராமலிங்கத்தின் கட்டுரையும் ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

இக்கட்டுரை மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறனும் ஆசிரியை கஸ்தூரியும் இணைந்து மேற்கொண்டு வரும் ‘எல்லோருக்கும் எளிய தமிழ்’ எனும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களுடைய சிந்தனையிலும், உழைப்பிலும் உருவாகி வரும் இத்திட்டம், குழந்தைகளுக்கு எளிய முறையில் தமிழ்க் கற்பிக்கவும், அவர்கள் தாமாகவே விளையாட்டாகவும், மகிழ்வோடும் தமிழைக் கற்கவும் பல வழிமுறைகளை ஆய்ந்து வருகிறது.

கஸ்தூரி இராமலிங்கம் கட்டுரையைத் தவிர்த்து மேலும் மூன்று கட்டுரைகள் மலேசிய ஆய்வாளர்களால் 16-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் படைக்கப்படுகின்றன. அந்தக் கட்டுரைகளின் விவரங்கள் செல்லியலில் இடம் பெறும்.

முத்து நெடுமாறனின் சிறப்புச் சொற்பொழிவு

muthu-nedumaranஉத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின்  ஏற்பாட்டில் கனடாவில் முதன் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில், முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளரும் ‘உத்தமம்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன்  சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளார் (Key note address).

இந்த மாநாட்டின் கருப்பொருள்களாக “ஆழ்த்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)”, என்பதும் “தமிழில் தரவு அறிவியல் (Data Science)” என்பதும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, தொரண்டோ பல்கலைக் கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தில் நடைபெறுகிறது. மலேசியாவிலிருந்து கணிசமான தொழில் நுட்ப, தமிழ் ஆர்வலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உத்தமம் மலேசியக் கிளையின் சார்பில் அதன் தலைவர் சி.ம.இளந்தமிழ்  கனடா மாநாட்டுக்கு மலேசியக் குழு  செல்வதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.