புதுடெல்லி – எல்லைப் பகுதிகளில் இந்தியா அத்துமீறுவதாகக் கூறி, இந்தியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கும்படி ஐக்கிய நாட்டு சபையில் பாகிஸ்தான் வலியுறுத்தியிருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐ.நா மனித உரிமை மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதிநிதி மலீகா லோதி, பேலட் குண்டுகளால் துளைக்கப்பட்ட பெண் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி, இந்தக் கொடூரம் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.
ஆனால், அதற்குப் பதிலளித்த இந்தியா, அப்பெண் காஷ்மீரைச் சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் பாலஸ்தீனப் பெண் என்பதையும் நிரூபித்திருக்கிறது.
பாகிஸ்தானின் இக்குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த இந்தியப் பிரதிநிதி பாலாமி திரிபதி, அப்பெண் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டினார்.
அப்புகைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு, பாலஸ்தீனத்தில் எடுக்கப்பட்டது என்றும், பேலட் குண்டுகளால் துளைக்கப்பட்ட அப்பெண்ணுக்கு அப்போது 17 வயது தான் என்பதையும் பாலாமி திரிபதி சுட்டிக் காட்டினார்.
அதேவேளையில், காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து பெண் இராணுவ அதிகாரி ஓருவரை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றதையும் சுட்டிக் காட்டினார்.