கேமரன் மலை – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் பார்வையாளர்களின் கவனிப்புக்கு ஆளாகியிருக்கும் முக்கியமானத் தொகுதிகளில் ஒன்று கேமரன் மலை.
மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கேமரன் மலைத் தொகுதியில் தனது கட்சி சார்பில் போட்டியிடுவேன் என அறிவித்திருக்கிறார். ஆகக் கடைசியாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் தேசிய முன்னணி யாருக்கு அந்தத் தொகுதி என்பது குறித்து எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என அறிவித்திருக்கிறார்.
அதே சமயம், மஇகாவோ, தாங்கள் பாரம்பரியமாகப் போட்டியிட்டு வரும் கேமரன் மலைத் தொகுதியை, மற்ற எந்தக் கட்சிக்கும் விட்டுத் தரமாட்டோம் என உறுதிபடத் தெரிவித்து விட்டார்கள்.
மஇகாவின் வேட்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், மஇகாவின் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் கேமரன் மலையின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு, அங்கு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு பணியாற்றி வருகிறார்.
ஜசெக வேட்பாளர் யார்?
2013 பொதுத் தேர்தல் முடிவுகள்…
இதற்கிடையில் கடந்த 13-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த எம்.மனோகரன் மீண்டும் ஜசெக சார்பில் அந்தத் தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2008-இல் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோகரன் கேமரன் மலைத் தொகுதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டிருப்பதோடு, தேர்தல் நடவடிக்கைக்கான பணியாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் என கேமரன் மலை ஜசெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் அக்டோபர் 7-ஆம் தேதி கேமரன் மலை, கம்போங் ராஜா மண்டபத்தில் ஜசெகவின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திலும் மனோகரன் கலந்து கொள்கிறார் என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியும், கேமரன் மலையில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தத் தொகுதியை வேதமூர்த்திக்கு விட்டுக் கொடுப்பதா என்ற முடிவை ஜசெக தலைமைத்துவம் இன்னும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு எதிர்க்கட்சியான பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா கட்சியும் கேமரன் மலையில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறது.
அந்தக் கட்சியின் சார்பாக கேமரன் மலையைச் சேர்ந்த உள்ளூர்க்காரரான சுரேஷ் போட்டியிடுவார் என்றும், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதியான ஜெலாய் தொகுதியிலும் பிஎஸ்எம் கட்சி வேட்பாளரை நிறுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கேமரன் மலை தொகுதியின் கீழ் வரும் தானா ராத்தா சட்டமன்றத் தொகுதியை 2013 பொதுத் தேர்தலில் ஜசெக கட்சி கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இங்கும் மீண்டும் ஜசெக சார்பான சட்டமன்ற உறுப்பினரே நிறுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-இரா.முத்தரசன்