தங்காக் – ஜோகூர் மாநிலத்தில் உள்ள லெடாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் புக்கிட் காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை 1 டிசம்பர் 2017-ஆம் நாள் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா சிறப்பாக நடந்தேறியது.
மஇகா ஜோகூர் மாநிலத் தொடர்புக் குழுத் தலைவராகவும், புக்கிட் காம்பீர் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்படும் டத்தோ எம்.அசோஜன் முயற்சியில் இந்த ஆலயம் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகமும் நிறைவேறியது.
சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் புக்கிட் கம்பீர் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொண்டார்.
இந்த ஆலய நிர்மாணிப்பின் மூலம் புக்கிட் கம்பீர் வட்டாரத்தில் ஆலயம் இல்லாதப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாலயம் கட்டுவதற்கான நிலத்தைச் சீன நண்பர் ஒருவர் வழங்கியதோடு ஜோகூர் மாநில மந்திரி பெசார் அவர்கள் 2 இலட்சம் ரிங்கிட் வழங்கியுள்ளார். அவரோடு சேர்த்து நிறைய பேர் இவ்வாலயத்திற்கு நன்கொடையும் பொருளுதவியும் வழங்கியுள்ளனர்.
ஏற்கனவே டாக்டர் சுப்ரா இவ்வாலய நிர்மாணிப்புப் பணிகளுக்காக 50 ஆயிரம் வெள்ளி வழங்கியிருந்தார். மேலும், இன்று கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாலயத்திற்கு மேலும் 1 இலட்சம் ரிங்கிட் ரிங்கிட் நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், இவ்வாட்டாரத்தில் புதிதாக ஆலயம் ஒன்று எழுவதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அமைச்சர் சுப்பிரமணியம் தமது வாழ்த்துகளையும் இவ்விழாவில் உரையாற்றும்போது தெரிவித்தார்.