கோலாலம்பூர் – அவதூறு வழக்கு ஒன்றில், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு, வலைப்பதிவாளர் பபகொமா என்ற வான் அஸ்ரி, 951,260.30 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் படி, இன்று திங்கட்கிழமை, அன்வார் இப்ராகிமுக்கு, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற துணை அரசாங்க வழக்கறிஞர் ஹஸ்னா சுல்கிப்ளி முன்னிலையில், 950,000 ரிங்கிட்டுக்கான காசோலையையும், 1,260 ரிங்கிட்டை 1 ரிங்கிட் தாள்களாகவும், மூன்று 10 காசுகளையும் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பபகொமா, நாட்டிலேயே அவதூறு வழக்கில் அதிக தொகை கட்டிய வழக்கு இது தான் என்று தெரிவித்தார்.
மேலும், 27 காசுகள் கொடுக்க வேண்டிய தான், 3 காசு நன்கொடையாகச் சேர்த்து 30 காசுகளாக வழங்கியதாகவும் பபகொமா குறிப்பிட்டார்.
கடந்த 3 மாதங்களாக பெரும்பான்மையான அம்னோ உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து இத்தொகையைச் சேர்த்ததாகவும் பபகொமா தெரிவித்தார்.