சென்னை – நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் நேற்று வியாழக்கிழமை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையானார்.
நேற்று இரவே விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், 20 நீதிபதிகளுக்கு எதிராக தான் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை கர்ணன் திரட்டுவாரா? அதனை நிரூபிப்பாரா? என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன், உச்சநீதிமன்றத்தால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல் குறித்த புகார் ஒன்றை பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்காமல் ஊழல் புகார் சுமத்திய கர்ணனின் நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது.
இவ்வழக்கில், கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்தது.
என்றாலும், தலைமறைவாக இருந்து வந்த கர்ணனை கடந்த ஜூன் மாதம் காவல்துறையினர் கோவையில் வைத்து கைது செய்தனர்.
அதன் பின்னர், கொல்கத்தா சிறையில் கர்ணன் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.