புத்ரா ஜெயா – ஒருதலைப் பட்ச மத மாற்றத்தில் இந்திரா காந்தியும் அவரது மூன்று குழந்தைகளும் சந்தித்த எண்ணற்ற துயரங்களிலும், போராட்டங்களிலும் கடந்த 9 ஆண்டுகளாக இணைந்திருந்து போராட்டம் நடத்தி வந்தவர் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன்.
இந்திரா காந்தி விவகாரத்தை நீதிமன்றம் – நாடாளுமன்றம் – மக்கள் மன்றம் – என மும்முனைகளிலும் முன்னெடுத்துச் சென்று தொடர்ந்து அயராது போராடியவர் குலசேகரன்.
இந்திரா காந்தியின் வழக்கறிஞராகவும் இறுதி வரை பணியாற்றி வருபவர்.
நேற்று கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளின் மதமாற்றம் செல்லாது எனத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த குலசேகரன், இந்தத் தீர்ப்பு தனக்கே ஆச்சரியம் அளிப்பதாகக் கூறினார்.
“நாடாளுமன்றம் செய்யத் தவறியதை, அரசாங்கம் செய்ய முன்வராததை, நீதிமன்ற நீதிபதிகள் ஒருமனதாக முடிவெடுத்து மலேசிய நீதித் துறை வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்” என அவர் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.