சியோல் – வரும் பிப்ரவரி 8-ம் தேதி தென்கொரியாவின் இயோங்சங் நகரில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, தென்கொரியாவுடன் இணைந்து வடகொரிய கலைஞர்கள் பங்கேற்கவிருந்த கலாச்சார நிகழ்ச்சியில் இருந்து வடகொரியா திடீரென பின்வாங்கியிருக்கிறது.
குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் மூலம் வடகொரியா – தென்கொரியா இடையிலான பகை தீர்ந்து நட்புறவு நீடிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வடகொரியாவின் இந்த அறிவிப்பு தென்கொரியாவை மிகவும் வருத்தமடையச் செய்திருக்கிறது.
குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியாவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அண்மையில் அறிவித்தார்.
இதனையடுத்து, தென்கொரியாவில் பயிற்சிக்காக வடகொரிய வீரர்களை அனுப்பும் பணிகளும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ஊடகங்களின் தவறான விமர்சனங்கள் தான், இம்முடிவு எடுப்பதற்குக் காரணம் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.