Home நாடு “ஜோ லோ மீது நடவடிக்கை எடுங்கள்! மௌனம் ஏன்?” நஜிப்புக்கு மகாதீர் கேள்வி

“ஜோ லோ மீது நடவடிக்கை எடுங்கள்! மௌனம் ஏன்?” நஜிப்புக்கு மகாதீர் கேள்வி

876
0
SHARE
Ad
பாலித் தீவு கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஜோ லோவின் இக்குனாமிட்டி உல்லாசக் கப்பல்

கோலாலம்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வணிகர் ஜோ தெக் லோவின் ‘இக்குனாமிட்டி’ என்ற பெயர் கொண்ட உல்லாசப் படகு இந்தோனிசிய மற்றும் அமெரிக்க நீதித் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நஜிப் ஜோ லோ மீதோ அல்லது அமெரிக்க நீதித் துறைக்கு எதிராகவோ நடவடிக்கை எடுக்க வேண்டும், இனியும் மௌனம் காக்கக் கூடாது என துன் மகாதீர் கூறியுள்ளார்.

“1எம்டிபி நிறுவனத்திற்கு நஜிப்தான் பொறுப்பாளர். 1 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டதாக நம்பப்படும் அந்தப் படகு கைப்பற்றப்பட்டிருப்பதால் இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறையிடம் நஜிப் புகார் செய்து ஜோ லோவைக் கைது செய்ய வேண்டும். அந்தப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அமெரிக்க நீதித் துறை கூறுவது பொய் என்றால், அதன் மீது எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு பக்கமும் இல்லாமல் மௌனமாக அவர் இனியும் இருக்கக் கூடாது” என்றும் மகாதீர் தெரிவித்தார்.

மேலும் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் 1எம்டிபிக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

“1எம்டிபி நிறுவனத்தின் ஆவணங்களின்படி நஜிப் அதன் ஆலோசகர் என்றும் நிதி நிர்வாகங்களில் அவர்தான் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் படைத்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவரே உல்லாசப் படகு 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்” என்றும் தனது வலைத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் மகாதீர் சாடியுள்ளார்.

1எம்டிபி முறைகேடுகளால் பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருக்கும் அமெரிக்க நீதித்துறை, ஜோ லோவின் உல்லாசப் படகும் 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டது எனக் குற்றம்சாட்டி இந்தோனிசிய அதிகாரிகளுடன் இணைந்து பாலித் தீவு அருகில் இந்தப் படகைத் தடுத்து வைத்தது.

“இது எந்த மாதிரியான அரசாங்கம்? அரசாங்கத்திற்குச் சொந்தமான பில்லியன் கணக்கான பணம் காணாமல் போய்விட்டது. இவை அனைத்தும் கடன்வாங்கப்பட்டவை. அதை அரசாங்கம் திரும்பச் செலுத்தியாக வேண்டும். மக்கள் பணத்தைக் கொண்டு திரும்பச் செலுத்தியாக வேண்டும். ஆனால், இது குறித்து அரசாங்கம் மௌனமாக இருக்கிறது. பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். அவர்களின் வாய்களில் ஏதாவது திணிக்கப்பட்டு அடைக்கப்பட்டு விட்டதா?” என்றும் மகாதீர் கடுமையாகச் சாடியுள்ளார்.