Home நாடு மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் – செங்கோட்டையன் பெருமிதம்

மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் – செங்கோட்டையன் பெருமிதம்

1140
0
SHARE
Ad

சென்னை – கடந்த மார்ச் 11 முதல் 17-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற மலேசியத் தமிழாசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறையைத் திறந்து வைத்து உரையாற்றிய தமிழக அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தமிழர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்தாலும் மலேசியாவிலுள்ள தமிழ்ச் சமூகத்தினர் மட்டும்தான் உண்மையான தமிழர்களாக வாழ்வதாகப் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

தமிழ்மொழி தழைக்க உலகம் முழுவதும் உள்ள தமிழாசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு என்றும் தயாராக இருப்பதாகவும் அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.

மலேசிய அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ் மொழிக் கல்விக்கும் கொடுத்து வருகின்ற முக்கியத்துவத்தை பார்த்து, பெருமிதம் கொள்வதாகவும் செங்கோட்டையன் மேலும் தெரிவித்தார்.

சென்னையில் “தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு”

#TamilSchoolmychoice

மலேசியக் கல்வி அமைச்சிலும் தமிழ்நாடு கல்வி அமைச்சிலும் பணியாற்றுகின்ற தமிழாசிரியர்களுக்கான ‘தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு’ எனும் பயிற்சி பட்டறை, கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இரு நாடுகளின் கல்வி அமைச்சுக்களின் ஆதரவில் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 50 தமிழாசிரியர்கள் பங்கேற்றனர்.

மலேசியக் கல்வித் துறை துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் கடந்த மார்ச் 12ஆம் தேதியன்று, சென்னை ‘வெஸ்டின் பார்க்’ தங்கும் விடுதியில் இப்பயிலரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

கமலநாதன் சிறப்புரை

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய டத்தோ ப.கமலநாதன், மலேசியாவில் 200ஆம் ஆண்டு தமிழ்க்கல்வி கொண்டாட்டத்தை தேசிய அளவில் அனுசரிக்கும் தன்னுடைய திட்டத்தை முறையே செயல்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும், மலேசியக் கல்வித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மஹாட்சிர்  காலிட்டுக்கும், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும், மலேசியத் தமிழாசிரியர்களுக்கான ‘தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு’ எனும் இப்பயிலரங்கை 3ஆவது முறையாக சென்னையில் நடத்துவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும், டத்தோ கமலநாதன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, மலேசியாவிலுள்ள தமிழாசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறையை மேம்படுத்துவதற்கு எத்தகைய பயிற்சிகள் தேவை என்பதை அவர்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த ‘தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு’ எனும் பயிலரங்கை டத்தோ கமலநாதன் சுயமாக வரையறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 7 நாள் பயிலரங்கில் ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி, மாணவர்களை இலகுவாகச் சென்றடையும் கற்றல் கற்பித்தல் முறை, புத்தாக்க முறையில் தமிழ்க்கல்வியை பயிற்றுவித்தல், சீர்திருத்த வகுப்பில் கற்பித்தல் முறை, கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பப் பயன்பாடு, கதை சொல்லும் வடிவில் தமிழ்க் கல்வியை பயிற்றுவித்தல், வகுப்பறையில் ஆசிரியரின் பங்கு என பற்பல தலைப்புகளில் பயிலரங்கம் இனிதே நடைபெற்றது.

இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் திருவள்ளுவர் மாவட்டதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பின்பற்றப்படுகின்ற கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மலேசியத் தமிழாசிரியர்கள் நேரடியாகப் பார்வையிட்டனர்.

இந்தப் பயிலரங்கத்தின் செலவுகளை மலேசியக் கல்வி அமைச்சும் தமிழ்நாடு கல்வி அமைச்சும் ஏற்றுக் கொண்டன.