கோலாலம்பூர் – கடந்த 19 & 20 மார்ச் 2018, அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் இணைந்து ஏற்பாடு செய்த மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் இரண்டாவது பன்னாட்டு மாநாடு 2018 (ICLLS 2018) இனிதே நிறைவுற்றது.
19-ம் தேதி காலை பத்து மணிக்குத் தொடங்கி, 20-ம் தேதி மாலை ஐந்து மணி வரை இம்மாநாடு பல பெரும் பேராசிரியர்களுடைய முக்கிய உரைகளுடன் நடைபெற்றது.
பேராசிரியர் கருணாகரன் (தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்), பேராசிரியர் திருவள்ளுவன் (அண்ணாலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய இயக்குனர் & இந்திய மொழிகள் புலத் தலைவர்), பேராசிரியர் தயாளன் (பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறையின் முன்னாள் தலைவர்), பேராசிரியர் நடனசபாபதி (அண்ணாலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய இயக்குனர்) போன்ற பழம்பெரும் அறிஞர்களோடு இளைய அறிஞர்களான முனைவர் மலர்விழி & முனைவர் தனலட்சுமி (மலாயாப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர்கள்), இணைப்பேராசிரியர் சுப்பையா, முனைவர் இளங்குமரன், முனைவர் கார்த்திகேஸ், முனைவர் பிராங்குளின், முனைவர் முனீஸ்வரன் (சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள்) ஆகியோரும் முனைவர் சுப்பிரமணியன் (பாரதியார் பல்கலைக்கழகம்), முனைவர் சிவசண்முகம், முனைவர் விஜயா (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) ஆகியோரும் மேலும் பலர் இம்மாநாட்டில் உரைகளை வழங்கி சிறப்பித்தனர்.
மாநாட்டின் முத்தாய்ப்பாய் பேராசிரியர் கருணாகரன், பேராசிரியர் திருவள்ளுவன், முனைவர் மலர்விழி, முனைவர் டார்வின் ஆகியோர் பேருரைகளை வழங்கினர். பயனுள்ள அதே சமயம் கேட்போரை ஈர்க்க வல்ல தலைப்புகளில் இவர்கள் உரைகளை வழங்கி சிறப்பித்தனர்.
மொத்தம் 86 கட்டுரைகள் இம்மாநாட்டில் படைக்கப்பட்டன. அவை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிகள் தனித்தனியான அறைகளில் நடைபெற்றன. மலேசியா, இந்தியா, அமெரிக்கா, மொரீசியஸ், ஶ்ரீ லங்கா, ஏமன் ஆகிய நாடுகளோடு இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி போன்ற மாநிலங்களிலிலிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுரைகள் யாவும் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான talias.org –இல் நான்கு நூல்களாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நூல்களைப் பேராசிரியர் திருவள்ளுவன் வெளியீடு செய்தார்.
எந்த இடையூறும் இல்லாமல் முழுக்க முழுக்க கல்விசார்ந்து இம்மாநாடு நடைபெற்றதாகவும் இம்மாநாடு அதன் நோக்கத்தை அடைந்துவிட்டதாகவும் மாநாட்டின் இயக்குனரும் புத்தகத்தின் தலைவருமான முனைவர் முனீஸ்வரன் குமார் தெரிவித்தார். அண்ணாலைப் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும் விரிவுரையாளர்களுக்கும் புத்தக உருப்பினர்களுக்கும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இது போல் பேராதரவு இருக்குமாயின் மேலும் பல கல்விசார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய புத்தகம் தயாராக இருப்பதாக இம்மாநாட்டின் துணை இயக்குனர் முனைவர் இளங்குமரன் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு மாநாட்டுக்கான பணிகளை இப்போதே திட்டமிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.