சுங்கை பூலோ – சிலாங்கூர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினருமான கைருடின் ஒத்மான், பாஸ் கட்சியிலிருந்து விலகி, பிகேஆரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கை பூலோவில் நடைபெற்ற செராமாவில், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியிடம், கைருடின் தனது பிகேஆர் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை அளித்தார்.
அதனைப் பெற்றுக் கொண்ட அஸ்மின் அலி, கைருடினை “மரியாதைக்குரிய நண்பர்” எனக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு சிலாங்கூர் பாஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கைருடின், சிலாங்கூர் பாஸ் தகவல் தொடர்புத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, சிலாங்கூர் அரசுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்த கைருடின் தற்போது பிகேஆர் கட்சியுடன் இணைந்திருக்கிறார்.
கடந்த 13-வது பொதுத்தேர்தலில் பாயா ஜாராஸ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட கைருடின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிஎன் வேட்பாளர் முகமது பிஸ்ரோ பின் மாட் ஜோகூரை விட 5,522 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் சார்பில் கைருடின் மீண்டும் பாயா ஜாராஸ் தொகுதியிலேயே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.