Home நாடு “அன்று தெமர்லோவில் சந்தித்தோம்! இப்போது இண்ட்ரா மக்கோத்தாவில் சந்திப்போம்”

“அன்று தெமர்லோவில் சந்தித்தோம்! இப்போது இண்ட்ரா மக்கோத்தாவில் சந்திப்போம்”

947
0
SHARE
Ad
இண்ட்ரா மக்கோத்தா: சைபுடின் அப்துல்லா – நஸ்ருடின் ஹசான்

குவாந்தான் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுவாரசியமான, நட்சத்திரப் போராட்டக் களமாக உருவெடுத்துள்ளது பகாங் மாநிலத்தின் இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்றத் தொகுதி.

பகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தான் நகரை அடுத்துள்ள தொகுதி இண்ட்ரா மக்கோத்தா.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பவுசி அப்துல் ரஹ்மான் 7,523 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற தொகுதியாகும் இது.

பவுசி அப்துல் ரஹ்மான்
#TamilSchoolmychoice

இந்த முறை பவுசி அப்துல் ரஹ்மான் நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிடாமல், பகாங் மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இதன்மூலம், பகாங் மாநில சட்டமன்றத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றினால், பவுசி அம்மாநிலத்தின் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை இண்ட்ரா மக்கோத்தா தொகுதியில் ஏற்பட்டுள்ள போட்டி ஏன் சுவாரசியமானது என்பதைத் தெரிந்து கொள்ள நாம் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று 2013 பொதுத் தேர்தலில் என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெமர்லோவில் தொடங்கிய அரசியல் பகைமை

நஸ்ருடின் ஹசான்

பகாங் மாநிலத்தின் தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ-தேசிய முன்னணி சார்பில் 2013 பொதுத் தேர்தலில் நிறுத்தப்பட்டார், சைபுடின் அப்துல்லா. அவரை எதிர்த்து பக்காத்தான் ராயாட் (அப்போது) கூட்டணியின் சார்பில் பாஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் நஸ்ருடின் ஹசான் டண்டாவி.

நஸ்ருடின் பாஸ் வட்டாரங்களில் பிரபலமான தலைவர்களில் ஒருவராவார். இவர் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவருமாவார்.

இறுதியில் அம்னோவின் சைபுடினை 1,070 வாக்குகளில் தோற்கடித்தார் பாஸ் கட்சியின் நஸ்ருடின். அப்போது சைபுடினின் இந்தத் தோல்வி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

காரணம், அப்போது தெமர்லோவின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சைபுடின் கல்வி துணை அமைச்சராகவும் இருந்தார்.

சைபுடின் அப்துல்லா

ஆனால், 2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக தனது கண்டனங்களைப் பதிவு செய்த சைபுடின் அதன் காரணமாக, அம்னோவிலிருந்து நஜிப்பால் நீக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து பிகேஆர் கட்சியில் இணைந்தார். தற்போது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் சைபுடின் அப்துல்லா.

இந்த முறை தெமர்லோவில் நிற்காமல், பிகேஆர் கட்சி வெல்ல வாய்ப்புள்ளத் தொகுதியாகப் பார்க்கப்படும் இண்ட்ரா மக்கோத்தாவின் பக்காத்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் சைபுடின்.

ஆனால், அதைத் தொடர்ந்து அவருக்குப் போட்டியாக பாஸ் கட்சியின் வேட்பாளராக, கடந்த 2013-இல் சைபுடினைத் தெமர்லோவில் தோற்கடித்த அதே நஸ்ருடின் ஹசான் நிறுத்தப்படுவார் என அறிவித்திருக்கிறது பாஸ் கட்சி.

இண்ட்ரா மகோத்தா நாடாளுமன்றம் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் தேதிதான் பாஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சி அறிவித்திருந்தாலும், செவ்வாய்க்கிழமை இரவு (10 ஏப்ரல் 2018) குவாந்தானில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் இண்ட்ரா மக்கோத்தாவுக்கான வேட்பாளராகவும் – பாஸ் கட்சியின் முதல் வேட்பாளராகவும் – நஸ்ருடின் ஹசானை அறிவித்து அந்தத் தொகுதியின் முக்கியத்துவத்தை மேலும் கூட்டியிருக்கிறார்.

தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான நஸ்ருடினுக்குப் பதிலாக மற்றொருவர் பாஸ் கட்சியின் சார்பில் தெமர்லோவில் நிறுத்தப்படுவார் என்றும் ஹாடி அவாங் அறிவித்திருக்கிறார்.

கடந்த 2013-இல் தெமர்லோவில் தோற்கடித்ததைத்போல் இந்த முறை இண்ட்ரா மக்கோத்தாவில் தோற்கடிக்கிறேன் என சூளுரைத்து சைபுடினைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார் நஸ்ருடின் ஹசான்.

இதன் காரணமாகத்தான் இண்ட்ரா மக்கோத்தா சுவாரசியமான போட்டிக் களமாக உருமாறியுள்ளது.

இன்னும், இந்தத் தொகுதிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்டவுடன், இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்றத் தொகுதி மும்முனைப் போட்டிக் களமாக உருவெடுக்கும்.

அப்போது இந்தத் தொகுதியின் முடிவுகள் எவ்வாறு அமையக் கூடும் என்பது மேலும் சுவாரசியமான ஒன்றாக அமையும்.

-இரா.முத்தரசன்