Home தேர்தல்-14 நிக் ஒமார் நிக் அசிஸ்: பக்காத்தானின் புதிய காந்தம்! அடுத்த கிளந்தான் மந்திரி பெசாரா?

நிக் ஒமார் நிக் அசிஸ்: பக்காத்தானின் புதிய காந்தம்! அடுத்த கிளந்தான் மந்திரி பெசாரா?

969
0
SHARE
Ad
நிக் ஒமார் நிக் அசிஸ்

கோத்தா பாரு – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு மக்களை ஈர்ப்பதற்குக் கிடைத்திருக்கும் மற்றொரு அரிய வகை காந்தம் – நிக் ஒமார் நிக் அசிஸ்!

தோக் குரு என்று அழைக்கப்பட்டவரும், பாஸ் கட்சியையும் தாண்டி, மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களாலும், ஏன் இஸ்லாமியர் அல்லாதவர்களாலேயே மரியாதையுடன் வணங்கப்பட்டவருமான அமரர் நிக் அசிஸ் அவர்களின் இரண்டாவது மகன்தான் 53 வயதான நிக் ஒமார்.

கிளந்தான் மாநிலத்தின் மந்திரி பெசாராக பல தவணைகள் இருந்தவர் நிக் அசிஸ்.

#TamilSchoolmychoice

தனது தந்தையார் பல தவணைகள் வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் செம்பாக்கா சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார் நிக் ஒமார் – ஆனால், பாஸ் கட்சியின் வேட்பாளராக அல்ல! மாறாக, அமானா கட்சியின் வேட்பாளராக!

அமானா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே பாஸ் கட்சியிலிருந்து நிக் ஒமார் நீக்கப்பட்டார்.

தற்போது பக்காத்தான் கூட்டணியின் முத்திரைப் பேச்சாளர்களில் ஒருவராகியுள்ள நிக் ஒமார், பக்காத்தான் கூட்டணியின் செம்பாக்கா வேட்பாளராகப் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரே நாளில் நட்சத்திர வேட்பாளராகி விட்டார்.

கிளந்தான் மாநிலம் மே 9 பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி வசம் வீழும் என முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் கணித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து கிளந்தானில் பக்காத்தான் அரசாங்கம் ஆட்சி அமைத்தால், நிக் ஒமார் மாநில மந்திரி பெசார் ஆகலாம் என்று கோடி காட்டியிருக்கிறார், கிளந்தான் மாநிலத்தின் பக்காத்தான் கூட்டணித் தலைவர் ஹூசாம் மூசா.

புத்ரா ஜெயாவிலும், ஷா ஆலாமிலும் நிக் ஒமார் பேச்சை இரசித்த மக்கள்

துன் மகாதீருடன் நிக் ஒமார் – புத்ரா ஜெயா பிரச்சாரக் கூட்டத்தில்

துன் மகாதீர் கடந்த வியாழக்கிழமை புத்ரா ஜெயாவுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்தபோது அவருடன் ஒரே மேடையில் தோன்றினார் நிக் ஒமார். அன்றைய தினம் ஷா ஆலாமில் மற்றொரு கூட்டத்தில் கலந்து கொண்டு ஷா ஆலாம் நாடாளுமன்றத்திற்கான அமானா வேட்பாளர் காலிட் சமாட்டுக்காக பிரச்சாரம் செய்தார் நிக் ஒமார்.

தனது தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிக் ஒமாரின், தோற்றம், நடை உடை பாவனைகள், அவரது தந்தையாரை நினைவுபடுத்துவதாக குதூகலிக்கின்றனர் பார்வையாளர்கள்.

கிளந்தானுக்கே உரிய வட்டார வழக்கு மலாய் மொழியில் எளிமையாகவும், புனித திருக்குரானின் புனித வாசகங்களை மேற்கோள் காட்டியும் அவர் ஆணித்தரமாக எடுத்து வைக்கும் அரசியல் வாதங்கள் கேட்போரைக் கவர்கின்றன.

“துன் மகாதீரும் தவறுகள் செய்திருக்கிறார். அதை அவரே ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தத் தவறுகளை மாற்றியமைக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார். அதனை அவருக்குக் கொடுப்பதுதான் முறை. நியாயம்! மகாதீர் குறித்து எல்லா வகையிலும் ஆத்திரம் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்கள் அன்வார் இப்ராகிம் குடும்பத்தினர். அவர்களே மகாதீரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு செயல்படும்போது, அதைக் குறை சொல்ல நாம் யார்? நானும் சகோதரி வான் அசிசாவைக் கேட்டேன். “நீங்கள் பழையதையெல்லாம் மறந்து விட்டு, ஏன் மகாதீரோடு இணைந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் கூறினார் – ‘நாட்டின் நன்மைக்காக” – என்று நிக் ஒமார் கூறும் காணொளி அண்மையக் காலங்களில் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.

பக்காத்தான் ஹரப்பானை மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து குழுவோடு ஒப்பிட்டு, மேலும் புதிய திறமையான காற்பந்து குழுவை பக்காத்தான் ஹரப்பான் தயார் செய்துள்ளது என நிக் ஒமார் விளக்கும் காணொளியும் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளது.

ஆர்ப்பாட்டமில்லாத, பண்பான நிக் ஒமாரின் பேச்சும் மக்களைக் கவர்ந்து வருகின்றது.

தனது தாயாரும் மற்ற சகோதர்களுக்கும் தனது அரசியல் முடிவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலையிலும், எனது குடும்பத்தினரின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நிக் ஒமார்.

தனது தந்தையார் நிக் அசிசின் கல்லறைக்கு மரியாதை செலுத்த முன்வந்த மகாதீருடன் வருவதற்குத் தயாராக இருந்த நிக் ஒமார், தனது மற்ற சகோதரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மகாதீரின் வருகையை ஒத்தி வைத்திருக்கிறார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மகாதீர் தனது தந்தையாரின் கல்லறைக்கு வரலாம் அதற்கு முன்னால் வந்தால் அது அரசியலாகி விடும் என நிக் அசிசின் மற்றொரு மகன் நிக் அட்லி மகாதீரின் வருகைக்கு தடை விதித்திருக்கிறார்.

குடும்ப அரசியல் சர்ச்சைகளுக்கு இடையில் நிக் ஒமாரின் பிரச்சாரமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காலமெல்லாம் தனது கணவர் சேவையாற்றிய பாஸ் கட்சியிலிருந்து நிக் ஒமார் விலகி நிற்பதற்கு அவர்மீது கண்டனம் தெரிவித்திருக்கிறார் நிக் ஒமாரின் தாயார்.

இறுதியாக இன்னொரு சுவாரசியத் தகவல்: நிக் ஒமாரின் இளைய சகோதரர்களில் ஒருவரான நிக் அப்து, கடந்த நாடாளுமன்றத் தவணையில் பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது, பாச்சோக் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுகிறார்.

கிளந்தான் மாநிலத்தில் நிக் அசிசின் எந்த மகன் அரசியல் வானில் சுடர்விடப் போகிறார் என்பதையும் மே 9 பொதுத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டும்!

-இரா.முத்தரசன்