கோலாலம்பூர் – தனது கடன் பற்றுச் அட்டை பாக்கிக்காக தனது குடும்பம் தொடர்புடைய ஓர் அறவாரியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தன்மீது கொண்டுவரப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சந்தித்து வாக்குமூலத்தை வழங்கவிருப்பதாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அகமட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறவாரியத்தின் நிதிகள் கையாளப்பட்ட விவகாரத்தில் அவரை ஊழல் தடுப்பு ஆணையம் நாளை திங்கட்கிழமை (ஜூலை 2) விசாரிக்கவிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளதை அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.
சாஹிட் மற்றும் அவரது மனைவிக்கான பற்றுச் சீட்டுக்கான (கிரெடிட் கார்ட்) தொகை சுமார் 8 இலட்சம் ரிங்கிட்டை அறவாரியம் ஒன்று செலுத்தியிருப்பதன் தொடர்பில் அவர் மீது விசாரணை நடத்தப்படவிருப்பதாகத் தெரிகிறது. அந்த அறவாரியத்தின் தலைவரும் சாஹிட் ஆவார்.
1997-இல் பதிவு செய்யப்பட்ட அந்த அறவாரியம் ஏழ்மை ஒழிப்புக்காக நிதிகளைப் பெறுவதற்கும் விநியோகிப்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளுக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்கவிருப்பதாகவும் சாஹிட் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு வழங்கிய நன்கொடை தொடர்பில் சாஹிட், அந்த சவுதி அரச குடும்ப உறுப்பினரைச் சந்தித்த விவகாரம் தொடர்பிலும் அவர் விசாரிக்கப்படவிருப்பதாக, ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாக, ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 22 ஆகஸ்ட் 2015-ஆம் நாள் ஜோகூர், ஸ்ரீ காடிங் அம்னோ தொகுதி கூட்டத்தில் உரையாற்றும்போது நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 700 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையை வழங்கிய சவுதி அரேபியா அரச குடும்ப உறுப்பினரை தான் சந்தித்திருப்பதாகத் சாஹிட் தெரிவித்திருந்தார்.