கோலாலம்பூர் – தலைநகரில் உள்ள அந்த மையமான வரலாற்றுத் திடலை பலமுறை நாம் சர்வ சாதாரணமாகக் கடந்து போயிருப்போம். பார்த்திருப்போம்.
ஆனால், அந்த இடத்தில்தான் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய விடுதலை வீரரும், இந்திய தேசிய இராணுவப் படையைத் தோற்றுவித்த வரலாற்று நாயகனுமான சுபாஷ் சந்திரபோஸ் கால்பதித்து, அன்றைய மலாயாவின் இந்திய சமூகத்தினரை இந்திய தேசிய இராணுவப் படையில் சேருங்கள் என்று அறைகூவல் விடுத்தார் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்காது.
அந்த வரலாற்றுபூர்வ மையம்தான் கோலாலம்பூரின் டத்தாரான் மெர்டேக்கா.
அங்குதான் 75 ஆண்டுகளுக்கு முன்னர் 1943-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, கோலாலம்பூருக்கு வந்த சுபாஷ் சந்திரபோஸ் ஒரு கூட்டத்தை நடத்தி, இந்திய விடுதலைக்காகப் போராடத் தான் அமைத்திருக்கும் இந்திய தேசிய இராணுவத்தில் சேருமாறு இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதைத் தொடர்ந்து பல இளைஞர்களும், யுவதிகளும் அந்தப் படையில் சேர்ந்தனர். பலர் தாங்களின் அணிந்திருந்த தங்களின் நகைகளையும், தங்களிடமிருந்த சொற்ப பணத்தையும் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக எடுத்து வழங்கினர்.
அந்த வரலாற்றுத் தினத்தை நினைவு கூரும் வண்ணம் அதே டத்தாரான் மெர்டேக்காவில் எளிமையான முறையில் ஒரு குழுவினர் கூடி கலந்துரையாடி தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் இந்திய தேசிய இராணுவப் படையில் இணைந்து போராடிய, செந்துலைச் சேர்ந்த 100 வயது அஞ்சலை அம்மாள், 93 வயது டான்ஸ்ரீ மகாதேவன் ஆகியோரும் அடங்குவர்.
நேதாஜியின் 1943-ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு அவரது உரையை மெய்சிலிர்க்கக் கேட்ட அனுபவத்தை, பல்வேறு சமூக இயக்கங்களின் வழி பாடுபட்ட பெரியவர் சுப.நாரயணசாமியும் இந்த நிகழ்ச்சியில் விவரித்தார்.
சுவாமி இராமாஜியும் இந்த நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.