
சென்னை: இந்தியாவையே உலுக்கியுள்ள குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேர்களில் 13 பேர் மரணமடைந்தனர். அவர்களில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங், சிகிச்சைகள் பலனின்றி நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 16) மரணமடைந்தார்.
இந்திய முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், கேப்டன் வருண்சிங் உள்பட 14 பேர், கடந்த டிசம்பர் 8-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள கோவை சூளூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் குன்னூரில் உள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு சென்றனர்.
அப்போது அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அது கீழே விழுந்து தீப்பிடித்ததில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். கேப்டன் வருண் சிங் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு குன்னூர் வெலிங்டனில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மறுநாள் 9-ந் தேதி அவர் விமானத்தில் பெங்களூருவுக்கு அடுத்த கட்ட சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள கமாண்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார்.
அவரின் மரணத்தைத் தொடர்ந்து அந்த இராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேர்களும் மரணமடைந்துவிட்டனர் என்ற சோகம் நாடு முழுமையையும் பரவி பேசுபொருளாகியிருக்கிறது.
வருண் சிங் உடல் இந்திய விமானப்படை மூலம் அவரின் பூர்வீக மாநிலமான மத்திய பிரதேசத்தின் போபால் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) நடைபெறுகின்றன.
அவரின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேச மாநில அரசாங்கம் 10 மில்லியன் (1 கோடி) ரூபாய் இழப்பீடு வழங்கியிருக்கிறது.