கோலாலம்பூர் – நாட்டின் பல பகுதிகளில் நச்சு கலந்த மலிவு விலை மதுபானத்தால் பலரும் பாதிக்கப்பட்டு, பல மரணங்கள் நேர்ந்திருக்கும் நிலையில் புதிதாக மேலும் 7 புதிய சம்பவங்கள் நடந்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 6 சம்பவங்கள் கோலாலம்பூரிலும் ஒரு சம்பவம் பேராக்கில் நடைபெற்றிருக்கிறது.
நச்சு கலந்த மதுபானம் தொடர்பான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இதுவரையில் 76 சம்பவங்கள் சிலாங்கூர், கோலாலம்பூர், பேராக் மாநிலங்களில் நிகழ்ந்திருக்கின்றன.
இதுவரையில் 29 பேர் மரணமடைந்திருக்கின்றனர். 18 பேர் சிலாங்கூரிலும், 9 பேர் கோலாலம்பூரிலும், 2 பேர் பேராக்கிலும் இதுவரையில் மரணமடைந்திருக்கின்றனர்.
மரணமடைந்தவர்களில் 12 பேர் மியன்மார் நாட்டையும், 6 பேர் நேப்பாளத்தையும், ஒருவர் வங்காளதேசத்தையும் சேர்ந்தவர்களாவர். மேலும் 9 பேர் உள்நாட்டினர். இருவரின் குடியுரிமை அடையாளங்கள் தெரியவில்லை.
இது தவிர, மெத்தனால் எனப்படும் நச்சு கலந்த மதுவினால் மரணம் அடையாமல் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் 47 என இதுவரை பதிவாகியுள்ளன.
இதுகுறித்துக் கருத்துரைத்த சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் இதுவரையில் 262 மதுபான விற்பனைக் கடைகளில் 780 ரக மதுபானப் புட்டிகள் சோதனையிடப்பட்டிருக்கின்றன என்றார்.
இதன் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.