அமிர்தசரஸ் – பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இரயில் தண்டவாளத்தின் அருகில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மீது இரண்டு இரயில்கள் அடுத்தடுத்து மோதித் தள்ளியதில் இதுவரையில் சுமார் 60 பேர் வரை மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்தனர்.
நேற்று விஜயதசமியை முன்னிட்டு வட மாநிலங்கள் முழுமையிலும் இராவணனுக்கு அம்பு போடும் தசரா விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது பெருநெருப்பு மூட்டி அதில் இராவணன் போன்ற பொம்மை செய்து அதன் மீது அம்பு விட்டு எரிப்பார்கள். அதே போன்றதொரு விழா அமிர்தசரசிலும், இரயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள மைதானத்தில் கொண்டாடப்பட்டிருக்கிறது.
அந்தத் தண்டவாளங்களைச் சுற்றி வேலிகள் எதுவும் இல்லாத நிலையில், அந்த இடத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ, காவல் துறையினரும் யாரும் இல்லை. இந்நிலையில் பெருநெருப்பு போடப்பட்டு எரிந்து கொண்டிருந்தபோது, அதில் பட்டாசுகளையும் சேர்த்துக் கொளுத்தியிருக்கின்றனர். இதனால் பட்டாசுகள் நாலாபுறமும் தெறிக்க, அதிலிருந்து தப்பிக்க மக்கள் இங்கும் அங்கும் ஓடி – அப்படியே தண்டவாளங்களைக் கடந்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் தண்டவாளத்தில் அடுத்தடுத்து 2 இரயில்கள் சில வினாடிகள் வித்தியாசத்தில் மிக வேகமாக வந்ததில், பொதுமக்களில் பலர் அந்த இரயிலால் மோதப்பட்டு உயிரிழந்தனர். அந்த இரயில்கள் எச்சரிக்கை ஒலி எதனையும் எழுப்பாமல் வந்ததாகவும், மக்கள் நடமாட்டம் மிகுந்திருந்தும் மிக வேகமாக வந்ததாகவும், காயமடைந்தவர்கள் கூறியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதோடு, நிலைமையை நேரடியாகக் கண்டறிய அமிர்தரசரஸ் சென்றடைந்தார்.
-செல்லியல் தொகுப்பு