கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 11) சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்த காரணத்தால் தலைநகரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும், அதனால் மக்கள் பாதிப்புக்குள்ளான நிலைமையும் ஏற்பட்டது.
மாலை 4.00 மணியளவில் தொடங்கிய கடும் மழையால், துன் ரசாக் சாலையிலிருந்து லோக் இயூ செல்லும் சாலைக்கு இடையிலான சுரங்கப் பாதையில் வெள்ளம் ஏற்பட்டது.
ஜாலான் வீராவத்தி, ஜாலான் புடு உலு, ஜாலான் புடு பெர்டானா, ஜாலான் செராஸ், ஜாலான் கெப்போங் ஆகிய பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
மாநகரசபை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, போக்குவரத்தைத் திருப்பி விடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கவும் நடவடிக்கைகளில் இறங்கினர்.
ஜாலான் துன் ரசாக் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்ள அதிலிருந்த 5 பேர் மாநகரசபையினரால் மீட்கப்பட்டனர். கார் வெள்ளித்தில் சிக்கிக் கொள்ள அவர்கள் காரின் கூரை மீது ஏறி நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
குறிப்பு: வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்ட சுரங்கப் பாதை ஸ்மார்ட் (SMART TUNNEL) சுரங்கப் பாதை அல்ல என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவும்.