ஜார்ஜ் டவுன்: அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பினாங்கு அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட்டை வருடாந்திர அடிப்படையில் அரசாங்க உதவிப் பெற்றப் பள்ளிகளின் கட்டிட சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கும் என பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி (படம்) தெரிவித்தார்.
அம்மாநிலத்தில் உள்ள 200-கும் அதிகமான ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கு நிவாரணம் தேவைப்படுவதால், அடுத்த ஆண்டு முதற்பாதியில் அப்பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றார்.
இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, மாநில கல்வி அமைப்பு தலைவருமான அவர், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு 20,000 ரிங்கிட் உதவித் தொகை தரப்படும் என்றார்.
இதுவரையிலும், பினாங்கு அரசாங்கம் மிஷனரி பள்ளிகள், சீனப் பள்ளிகள், அரசாங்க உதவிப் பெற்ற பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 131 பள்ளிகளுக்கு உதவித் தொகையாக 8.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக இராமசாமி தெரிவித்தார். அதோடு மட்டுமில்லாமல், கடந்த ஆண்டு, இஸ்லாமியப் பள்ளிகளுக்காக பினாங்கு அரசாங்கம் 36.8 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளதையும் இராமசாமி தெளிவுப்படுத்தினார்.