சென்னை – கோஷ்டிப் பூசலுக்குப் பேர்போன தமிழகக் காங்கிரஸ் கட்சியில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், மீண்டும் ஒரு தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்துள்ளது.
நீண்ட காலமாக ஆரூடம் கூறப்பட்டு வந்தபடி, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசர் (படம்) நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வேறு சில மாற்றங்களும் செய்யப்பட்டன. நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1991ல் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.