கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமையன்று (29 மார்ச்) ரந்தாவ் வட்டாரத்தில் பிகேஆர் கிளைத் தலைவரான கே.சுரேஷ் என்பவரை மஇகா உறுப்பினர் ஒருவர் தாக்கினார் என ரந்தாவ் சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் குற்றம் சாட்டியிருப்பதைத் தொடர்ந்து அதனை நிரூபிக்கும்படி மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஸ்ரீராமுக்கு சவால் விடுத்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இந்த சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த சரவணன் அடுத்த 24 மணி நேரத்தில் அவ்வாறு நிரூபிக்காவிட்டால், ஸ்ரீராம் மீது மஇகா வழக்கு தொடுக்கும் எனவும் எச்சரித்தார்.
“உள்துறை அமைச்சு என்பது தற்போது நம்பிக்கைக் கூட்டணியின் கீழ்தான் செயல்படுகிறது. தாக்குதல் நடத்தியது மஇகா உறுப்பினர் என்றால் அவரைக் கைது செய்து அவர் மஇகா உறுப்பினர்தான் என்பதை பகிரங்கமாக அறிவியுங்கள். இல்லாவிட்டால் ஸ்ரீராம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு 24 மணி நேர அவகாசம் தருகிறோம்” எனவும் சரவணன் கூறியதாக மலேசியாகினி இணையத் தளம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமையன்று தாமான் செம்பாக்கா கிளைத் தலைவர் கே.சுரேஷ் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஸ்ரீராம், மஇகா உறுப்பினர் ஒருவர்தான் சுரேஷைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
தோல்வி பயத்தில் ஸ்ரீராம் இவ்வாறு கூறுகிறார் என்றும் சரவணன் சாடினார்.